ஹோமாகமையில் அமைக்கப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப நகர் உருவாக்கம் எந்தவகையிலும் பொது மக்களைப் பாதிக்காது என அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.
ஹோமாகமையில் அமைக்கப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப நகரம் காரணமாக சுமார் 7 ஆயிரம் வரையான பொது மக்கள் பாதிக்கப்படவுள்ளதாக வௌிவந்துள்ள தகவல்கள் குறித்து ஊடகமொன்று அமைச்சரிடம் வினவியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், 7 ஆயிரம் பொது மக்கள் பாதிக்கப்படும் கருத்து தோல்வியுற்ற அரசியல்வாதிகளின் பொய்ப்பிரச்சாரமாகும்.
தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கப்படுவதற்கு சுவீகரிக்கப்படும் பொது மக்களின் காணிகள் தொடர்பில் முன்னறிவித்தல் கொடுக்கப்படும். அத்துடன் பொருத்தமான இழப்பீடும் வழங்கப்பட்டே அக்காணிகள் சுவீகரிக்கப்படும்.
அதனை விடுத்து பொது மக்களுக்குப் பாதிப்பான வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட மாட்டாது. கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு அவ்வாறான பாதிப்புகள் ஏற்பட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்றும் அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.