நாடு முழுவதும் பேரணிகளை நடத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்

Report Print Aasim in அரசியல்

எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நாடு முழுவதும் பொதுமக்கள் பேரணிகளை நடத்த கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் பெற்றுள்ள வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவும், அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் வெறுப்பை தமக்கு உசிதமான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் இதன் மூலம் கூட்டு எதிர்க்கட்சி உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளும் பொது மக்கள் பேரணிகள் எதிர்வரும் ஆறு மாதகாலப் பகுதிக்கு தொடர்ச்சியாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளன.

அத்துடன் கொழும்பிலும் குறுகிய கால அவகாசமொன்றில் பொதுமக்களை திரட்டி பொது மைதானம் ஒன்றில் பேரணியொன்றை நடத்தவும் கூட்டு எதிர்க்கட்சி உத்தேசித்துள்ளது.

இவ்வாறான பேரணிகள் ஊடாக கூட்டு எதிர்க்கட்சியினருக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக் கொள்வதற்கான பொதுமக்கள் அழுத்தமொன்றை உருவாக்கவும் கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.