பிரியங்க பெர்னாண்டோ ஏன் இலங்கை வருகின்றார்?

Report Print Shalini in அரசியல்

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை இலங்கைக்கு அழைத்தமைக்கான காரணத்தை இராணுவ ஊடகப்பேச்சாளர் சுமித் அத்தபத்து வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

இதில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளமை குறித்து ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இராணுவ ஊடகப்பேச்சாளர்,

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சமிக்ஞை காட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அந்தச் சம்பவம் சரியானது என்று கூறுவதற்கு ஒரு தரப்பினரும், தவறானது எனக் கூறுவதற்கு ஒரு தரப்பினரும் உள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பிரச்சினை அப்போதே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும், அந்தப் பிரச்சினை மீண்டும் மீண்டும் தோற்றம் பெற்றது.

எனவே, அது குறித்து ஆராய இராணுவத் தளபதி அவரை இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது எமது அரச சேவையில் உள்ள சாதாரண நடவடிக்கையாகும். அவருக்கு தமது சேவையை தொடர முடியுமா? நாட்டுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்துக்கு ஏற்படும் அசெளகரியம் என்பன குறித்து பேசுவதற்கே அவரை இலங்கைக்கு அழைப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.