தமிழீழம் உருவாகும் என்று சம்பந்தன் உணர்ச்சிவசப்பட்டு கூறவில்லை: த.தே.ம.முன்னணி

Report Print Sumi in அரசியல்

சிங்கள தேசத்தின் முகவராக இரா.சம்பந்தன் செயற்பட்டு வருவதுடன், வடகிழக்கினை உடைத்து தனிநாடு உருவாக்கப்படுமென்றும் தற்போது எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெளிவாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தாமரை மொட்டுக்குள்ளால் தமிழீழம் மலரும் என்ற கருத்து உணர்ச்சி வசப்பட்டு சொன்ன கருத்து அல்ல. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடகிழக்கில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக அவற்றினை நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழ் மக்களின் வாக்கினை கவரும் வகையில் கூறிய கருத்தும் அல்ல.

தனது எதிர்க்கட்சிப் பதவி பறிபோகப் போகின்றதென்ற பதற்றத்தில் கூறிய கருத்தும் அல்ல. தன்னை ஒரு தமிழனாக சிந்தித்தது கிடையாது. சிங்கள தேசத்தின் நலனின் அடிப்படையில் செயற்பட்டு வந்த முகவர்.

இந்திய மற்றும் மேற்குலகின் முகவராகவும் நீண்டகாலமாக செயற்பட்டு வருகின்றார். ரணில் மற்றும் மைத்திரி தலைமையிலான அரசு உருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் சிங்கள மக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு வாக்களித்துள்ளார்கள்.

தமிழர்கள் தமிழ் தேசிய வாதத்தினை கைவிட்டு, ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றுக்கொண்டு, வடகிழக்கு கோரிக்கையினை கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் வாழத் தயார் என்ற பிற்பாடும், சீன அரசு சார்ந்த ராஜபக்சவை தான் தெரிவு செய்யப் போகின்றார்கள் என்றால், அவ்வாறான நிலமையினை சீன நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை.

சீன நாட்டினை சார்ந்த ராஜபக்ச மீண்டும். மேற்குலக நாடுகள் எதிர்த்து வடகிழக்கு உடைக்கப்பட்டு தனிநாடாக உருவாக்கப்படுமென்று சம்பந்தன் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்களின் நலன் அடிப்படையில் அந்தக் கருத்தினை முன்வைக்கவில்லை. இந்த நாடு இரண்டாக பிரிந்துவிடக் கூடாது, சிங்களவரின் மேலாதிக்கத்தையும், பௌத்த மதத்தினையும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள், அதை வீணாடிக்கப் போகின்றீர்கள் என்ற கோணத்தில் சொல்லியிருக்கின்றார்.

பூகோள அரசியலில் தமிழர்கள் தமது நலனின் அடிப்படையில் செயற்பட்டால், தமிழ் மக்கள் தமது ஆதிக்கத்தினை செலுத்த முடியுமென்பதுடன், தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து வாழ முடியும்.

மீண்டும் தென்னிலங்கையில் ஏற்படும் எழுச்சி காரணமாக கடந்த காலத்தில் தாம் சொன்ன பொய்களை எல்லாம் மீறி, இதுவரை காலமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறி வந்த பூகோள அரசியல் நிலைமையினை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனை எமது தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் எமது இனத்தின் நலன்சார்ந்த முடிவுகளை எடுத்தால், எமது இனத்தின் அங்கீகாரத்தினைப் பெற்றுகொள்ள முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.