யாருடன் இணைந்த ஆட்சியமைப்பது? சு.கவின் கல்குடா தொகுதி அமைப்பாளர் விளக்கம்

Report Print Navoj in அரசியல்
65Shares

இலஞ்ச ஊழற்ற சபையை யார் உருவாக்குவார்களோ அவர்களின் பக்கம் நாம் சேர்ந்து ஆட்சியமைப்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கின்றோம் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் ஸஹ்வி தெரிவித்தார்.

உள்ளுராட்சி தேர்தலில் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையில் போட்டியிட்டு விகிதார பட்டியல் மூலம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மூன்று ஆசனங்களை பெற்றுக் கொண்டமை தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஓட்டமாவடி பிரதேச சபையில் ஒரு ஆசனமும், வாழைச்சேனை பிரதேச சபையில் இரண்டு ஆசனங்களுமாக விகிதாசார பட்டியல் மூலம் கிடைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச சபையில் எந்தக்கட்சி ஆட்சியமைக்கப் போகின்ற விடயம் தற்போது பேசு பொருளாக காணப்படுகின்றது.

யாருடன் சேர்ந்தால் இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்க முடியுமோ அவர்களுடன் சேரக் கூடிய வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் இதுவரை காலமும் இலஞ்ச ஊழலுடன் கூடிய பிரதேச சபை ஆட்சிதான் நடைபெற்றது என்று அரசியல் உயர் பீடங்கள் தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஏனெனில் தேர்தலின் போது இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்குவோம் என்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை உருவாக்குவோம் என்று கூறி மக்களிடத்தில் வாக்குகளை பெற்று இங்கு கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது.

நாங்கள் யாருடன் இணைந்து கொண்டால் கல்குடாத் தொகுதியை அபிவிருத்தி செய்ய முடியும் என்பது பற்றியும், இலஞ்ச ஊழற்ற பிரதேச சபையை வழி நடத்தலாம் என்பது பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கின்றோம்.

தேர்தல் காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எந்தவித இலஞ்சங்களும் வழங்காமல் தேர்தலை நாங்கள் நடாத்தி உள்ளோம்.

அதன் மூலம் கிடைத்த வெற்றிதான் ஓட்டமாவடி பிரதேச சபையில் ஆட்சி அமைக்கும் சக்தி எங்களுக்கு உள்ளது.

அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினர் எங்களிடமும், கட்சி தலைமைப் பீடத்துடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.

ஆனால் இவ்விடயமாக நாங்கள் எந்தவித பதிலும் இதுவரை வழங்கவில்லை. ஆனால் எதிர்வரும் 25ம் திகதியளவில் எந்தக் கட்சியினருடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் தகவல்களை வழங்குவோம் என்றார்.