த.தே.கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோருடன் ஆட்சியமைக்கத் தயார்

Report Print Nesan Nesan in அரசியல்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் நாவிதன்வெளிப் பிரதேசசபையில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் கட்சிகள் மற்றும் சுயேற்சைக்குழுவை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கத் தயாராக இருக்கின்றோம் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாவிதன்வெளிப் பிரதேசசபையில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாவிதன்வெளிப் பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதியாக இருக்கின்றது இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியை மையமாக வைத்தே நாம் சேவையாற்றி வருகின்றோம்.

கடந்த காலத்தில் கூட நான் பிரதேச சபையின் தவிசாளராக இருந்தும் மாகாண சபையின் உறுப்பினராக இருந்தும் சேவையாற்றியவன்.

இம் முறை நடைபெற்ற தேர்தலில் எமக்கும் எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எதிராக பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதனைக் கூட எமது மக்கள் பொருட்படுத்தாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வெற்றியடையச் செய்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு இரு ஆசனங்கள் தேவையாக இருப்பதனால் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வருகின்ற எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி சுயேற்சைக்குழுவாக இருந்தாலும் சரி இணைத்துக் கொண்டு ஆட்சியமைப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.