ஹட்டன், டிக்கோயா நகரசபையில் ஆட்சியமைக்க ஐ.தே.கவிற்கே தகுதியுள்ளது

Report Print Thirumal Thirumal in அரசியல்

ஹட்டன், டிக்கோயா நகரசபையிலுள்ள 6 வட்டாரங்களில் 4 வட்டாரங்களை வெற்றிக்கொண்டு ஏழு உறுப்பினர்களை தன்வசம் கொண்டுள்ள ஐ.தே.கட்சியே இந்த நகரசபையை ஆளும் தகுதியைக் கொண்டுள்ளது என மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஐ.தே.கட்சி ஹட்டன், டிக்கோயா நகரசபையின் ஹட்டன், டன்பார், ஆரியகம , பொன்னகர் ஆகிய வட்டாரங்களில் வெற்றிப் பெற்றுள்ளது.

ஹட்டன், டன்பார், ஆரியகம ஆகிய வட்டாரங்கள் இரட்டை உறுப்பினர்கள் கொண்ட வட்டாரங்களாகும். இந்த வட்டாரங்களை ஐ.தே.க வெற்றிக்கொண்டதன் ஊடாக ஆறு உறுப்பினர்களையும் பொன்னநகர் வட்டாரத்தை வெற்றிக்கொண்டதன் மூலம் ஒரு உறுப்பினருமாக ஏழு உறுப்பினர்களை ஐ.தே.க வெற்றிப்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றிப் பெற்ற ஏழு உறுப்பினர்களில் 4 உறுப்பினர்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்தவர்களாவர்.

ஹட்டன், டிக்கோயா நகரசபைக்கு வட்டாரங்கள் ஊடாக 9 உறுப்பினர்களும் போனஸ் ஆசனங்களூடாக 7 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும்.

அந்த அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி 7 உறுப்பினர்களையும் இ.தொ.கா. 6 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு உறுப்பினர்களையும் இலங்கை சோசலிஸ்ட் கட்சி ஒரு உறுப்பினரையும் வெற்றிக்கொண்டுள்ளது.

எனவே ஹட்டன், டிக்கோயா நகரசபையை ஐக்கிய தேசிய கட்சியே ஆளும் தகுதியைக் கொண்டுள்ளது. ஹட்டன் நகரை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் திகாம்பரம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.

இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஹட்டன், டிக்கோயா நகர மக்கள் தேர்தல் முடிவுகள் மூலமாக அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இருந்த போதும் இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளைக் குழப்புவதற்கு சிலர் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை ஹட்டன் நகர மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும், எனவே ஹட்டன் - டிக்கோயா நகரசபையை ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி செய்வதற்கான முழு தகுதியையும் பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.