லசந்த கொலை வழக்கு: என்னை கைது செய்யாதீர்கள்! முன்னாள் பொலிஸ் மா அதிபர் மனு

Report Print Steephen Steephen in அரசியல்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் தான் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, திணைக்களத்தின் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் அனைத்து பிரதிவாதிகள் சார்பிலும் சட்டமா அதிபர் தனது எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரியவருகிறது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட காலத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளாக கடமையாற்றிய சிலர் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயர் நீதிமன்றத்தில் மேற்படி மனுவை தாக்கல் செய்துள்ளார்.

லசந்த கொலை வழக்கில் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார, கல்கிஸ்சை பிரிவுக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமாந்த அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலை தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளாது, கொலைக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை பாதுகாத்தமை மற்றும் சாட்சியங்களை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த அதிகாரி, லசந்த கொலை தொடர்பில் நேற்றைய தினம் கல்கிஸ்சை நீதவானின் அறையில் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.