வட்டுவாகலில் தொடரும் அசாதாரண நிலை! அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மக்கள்

Report Print Shalini in அரசியல்

முல்லைத்தீவு, வட்டுவாகல் கடற்படை முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

வட்டுவாகல் பாலத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வட்டுவாகல் கடற்படையினரின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை இன்றைய தினம் நில அளவீடு செய்யவிருந்த நிலையில் அவற்றை எதிர்த்து குறித்த மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடிய போதும், போராட்டத்தை கைவிடாத மக்கள் வீதியில் அமர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், போராட்டக்காரர்களை கலைந்து போக வைப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் வாகனம் போராட்டக்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலிஸ் வாகனமும் வழிமறிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சற்று அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.