மைத்திரி, ரணிலின் கோப நாடகம் முடிந்து தற்போது உற்ற நண்பர்கள் திரைப்படம்

Report Print Nivetha in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கூட்டு அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்தன் மூலம், தேர்தலில் வாக்குகளை பெற்றுக் கொள்ள இரண்டு தரப்பினரும் நடித்துள்ளனர் என்பது தெளிவாக தெரியவந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

இதனால், மைத்திரி, ரணிலின் கோப நாடகம் முடிந்து உற்ற நண்பர்கள் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியை விரும்பாத மக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வாக்களித்தனர்.

இந்த கட்சிகளுக்கு வாக்களித்த 13 வீத மக்களின் புறந்தள்ளி விட்டு மீண்டும் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முயற்சித்து வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்னர் சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் அமைக்கப்படும் என மக்களுக்கு பொய்யான வாக்குறுதி வழங்கப்பட்டது.

தற்போது இந்த நாடகத்தின் இறுதி அங்கமான அமைச்சரவையில் மாற்றங்களை செய்ய தயாராகி வருகின்றனர்.

நாட்டிற்குள் தற்போது ஸ்திரமற்ற நிலைமை காணப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் கூட்டணி அரசாங்கம் அமைந்தால், நாடும் அழியும் எனவும் மொஹமட் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.