அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் சம்பந்தன் விடுத்துள்ள கோரிக்கை

Report Print Shalini in அரசியல்

இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜேம்ஸ் சென்.சென்ப்ரெக்னெர் மற்றும் அவரது தலைமை அதிகாரி மட்பைசென்ஸேனிஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளனர்.

குறித்த சந்திப்பு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றதேர்தல்கள் தொடர்பிலும் அதன் பின்னர் உள்ள அரசியல் நிலைமை தொடர்பிலும் இரா. சம்பந்தன் எடுத்துரைத்தார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் இந்த நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு சாதகமான முடிவினை எட்டவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்ததாக சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை புதிய அரசியலமைப்பானது சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணையை பெறவேண்டியதன் அவசியத்தினையும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிறைவேற் றகடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்ட தாமதங்களை சுட்டிக்காட்டிய சம்பந்தன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதிசெய்ய வேண்டும் எனவும் காங்கிரஸ் உறுப்பினரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.