தேசிய அரசு தொடர்ந்தால் 25 எம்.பிக்கள் பொதுஜன பெரனமுவில் இணைவர்

Report Print Steephen Steephen in அரசியல்

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால், சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ள ஐக்கிய தேசியக்கட்சி தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளதால், அரசியலமைப்புச் சட்டத்தின் 46(4) பந்திக்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை 48 ஆகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களின் எண்ணிக்கையை 45 ஆக அதிகரிக்கவும் நாடாளுமன்றம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய யோசனையில் கூறியுள்ளார்.

பிரதமர் ஆங்கிலத்தில் முன்வைத்த யோசனையின் சிங்கள அர்த்தம் இதுதான். யாருடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தோம் என்பதை பிரதமர் கூறவில்லை.

யாருடன் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம் என்பதை கூறாதது மட்டுமல்ல, எழுத்து மூலமான உடன்படிக்கையை முன்வைக்காமல் அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க இடமளிப்பதாக சபாநாயகர் தீர்மானித்தார்.

இது நாடாளுமன்றத்தின் எதிர்காலத்திற்கு செய்த தவறான முன்னுதாரணம். நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு போதுமான பெரும்பான்மை இருக்க வேண்டும்.

போதுமான பெரும்பான்மை பலம் இல்லாமல் அவருக்கு பிரதமர் பதவியை வகிக்க முடியாது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.