மஹிந்தவின் மீள் எழுச்சி பேரினவாதத்தின் உண்மை முகம்!

Report Print Thileepan Thileepan in அரசியல்

மஹிந்தவின் மீள் எழுச்சி பேரினவாதத்தின் உண்மை முகம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

புளியங்குளம் வைத்தியசாலைக்கான புதிய கட்டட திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசியலைப் பொறுத்தவரை நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சிங்கள பேரினவாதம் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்று கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் அதனை அவதானித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழர்களாகிய நாம் இன்று ஒற்றுமையாக இணைந்து செயற்படவேண்டியவர்களாக இருக்கிறோம். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழர்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலை இன்னமும் தொடர்கின்றது.

எமது மக்கள் சுயமாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு தனியான பூர்வீக பிரதேசத்தில் வடக்கு, கிழக்கு இணைந்த மாநிலமாக, எங்களை நாங்களே ஆட்சி செய்யக்கூடிய வகை ஏற்படுத்தப்படவேண்டும். இன்று மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டெழுந்து கொண்டிருக்கிறார்.

இந்த முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் சிங்கள மக்கள் மத்தியிலான அவரது இனவாதக் கருத்துக்கள் அவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளது. தமிழீழம் மலரப்போகின்றது, அதற்கு நல்லாட்சி துணைபோகின்றது என பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார்.

எனவே மஹிந்தவின் மீள் எழுச்சி எவ்வாறான தாக்கங்களை எமக்கு ஏற்படுத்தப்போகின்றது என்பது தொடர்பில் நாம் அவதானமாகச் சிந்திக்க வேண்டும்.

தற்போதைய அரச தலைமைகளும் எங்களுக்கு உரிய முறையில் தீர்வுகள் எதனையும் பெற்றுத்தரக்கூடிய நிலைமையில் இல்லை.

எனவே சிங்கள மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் வரை தொடர்ந்துவரும் சிங்கள அரசுகள் தமிழர்களை ஏமாற்றி வருவது ஒரு வரலாறாகப் பதியப்பட்டுள்ளது.

ராஜபக்ச அரசை தோற்கடிக்கும் வரை தமிழர்களாகிய நாம் ஒரு அடிமையான வாழ்வையே வாழ்ந்தோம். தற்போதுதான் ஓரளவு அடிமை வாழ்வில் இருந்து மீண்டெழுந்திருக்கிறோம்.

நாம் இன்னமும் சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய சாத்தியம் ஏற்படவில்லை. சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் ஆயுதப் போராட்ட காலம் வரை தமிழினம் ஒற்றுமையாகப் பயணித்திருக்கிறோம்.

தொடர்ந்தும் இவ்வாறு பயணிக்கவேண்டும். தமிழர்களின் ஒற்றுமையே பலம். ஒற்றுமைக்காக எமது தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும். எமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் களையப்படவேண்டும்.

எமது ஒற்றுமையை உருக்குலைத்துவிட்டால் எமது இனத்தின் இருப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கூட சுயேட்சைகள் என்கிற போர்வையில் எமது பிரதேசங்களில் அரசினரின் ஊடுருவல்கள் அதிகரித்திருந்ததை நாம் காணமுடிந்தது. பணத்தை வழங்கி எம்மவர்களை உள்வாங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன.

தமிழர்கள் என்றும் அரசுக்கு விலைபோய்விடக்கூடாது. தமிழ் மக்களுக்காக சிந்திக்கும் தலைமைகளுடன் இணைந்து ஒற்றுமையாக நாம் பயணிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers