தேர்தல் முடிவுகளில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சொன்ன செய்தி என்ன?

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டும் என்ற செய்தியை நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைதீவில் நேற்று இடம்பெற்ற பித்தியேக நேர்காணலில் கருத்துரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் பேசிய அவர்,

வடக்கு கிழக்கில் பெரும்பாலான சபைகளில் த.தே.கூட்டமைப்பு நிறைய ஆசனங்களைப்பெற்றுள்ளன. எனினும் பல இடங்களில் தனித்து ஆட்சிமையக்க முடியாத நிலை. அந்த மக்கள் சொன்ன செய்தி ஒற்றுமையாகவாருங்கள் என்பதுதான்.

ஒரே கொள்கையோடு பயணிக்கின்ற கட்சிகள் கட்டாயமிணையவேண்டிய காலகட்டமிது. தமிழ்த் தேசியத்திற்கு விரோதமாக சில கட்சிகளிருக்கலாம். அவைகளும் தேசியத்தின்பால் வரவேண்டும் என்றார்.

வடக்கு கிழக்கில்பெரும்பாலான சபைகளில் த.தே.கூட்டமைப்பு ஆசனங்களைக்கைப்பற்றியிருந்தபோதிலும் தனித்து ஆட்சியமைக்கமுடியாத நிலைமையும் வாக்கு வங்கியில் கணிசமான சரிவும் ஏற்பட்டுள்ளதே இது பற்றி என்ன கூறவிளைகின்றீர்கள் என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,

நீங்கள் கூறுவது உண்மைதான். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம். எமது சமகால காய் நகர்த்தல்கள் இராஜதந்திர ரீதீயாக தந்திரோபாய செயற்பாடுகளில் உரிமைப்பிரச்சினை தொடர்பாக நாம் கவனம் செலுத்திவந்தோம்.

அனைத்தையும் வெளிப்படையாகக் கூறமுடியாது. இதனை ஏனைய கட்சிகள் பிழையாக சித்திரித்து பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்கள். அதுவும் ஒரு தற்காலிக பின்னடைவு.

இரண்டாவது காரணம் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவின்போது ஏற்பட்ட சிக்கல்கள். சிலவேளை பொருத்தமற்ற வேட்பாளர்கள் தெரிவானமை.

மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தும், ஆனால் பணபலமற்றவர்கள் கல்வித்தரம் குறைந்தவர்கள், அதேவேளை கட்சியில் பழைய உறுப்பினராயிருப்பார்கள் ஆனால் மக்கள் மத்தியில் செல்வாக்கில்லாதவர்கள். இவ்வாறான சமநிலைத்தளம்பலுள்ள வேட்பாளர் தெரிவும் ஒரு காரணம்.

எமது கூட்டமைப்பிற்குள் ஏனைய பங்காளிக்கட்சிகளின் தலையீடுகள் இப்படி. கட்சி மற்றது தனிநபர்செல்வாக்கு தேவைப்பட்டது. அது குறைவு.

மூன்றாவது காரணம்! ஏனைய கட்சிகளைப்போல் த.தே.கூட்டமைப்பிற்கென ஒரு தனியான ஊடகம் இல்லை. அதனால் எமது கொள்கைகளை செற்றிடங்களை சொல்லுவதில் பின்னடைவு இருந்ததையும் கூறமுடியும்.

கேள்வி: தேர்தல் முடிவடைந்துவிட்டது. மாவட்டத்தின் த.தே.கூ. முகவர் என்ற அடிப்படையில் இனி உங்களது சபைகளில் கூட்டாட்சிக்கான வியூகம் தவிசாளர் பிரதிதவிசாளர் தெரிவுகள் எவ்வாறு அமையும்?

எமது கொள்கைகளோடு ஒத்துப்போகின்ற கட்சிகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடாத்தி கூட்டாட்சி அமைக்கும்பணியில் ஈடுபடுவோம். தேசியத்திற்கு விரோதமான கட்சிகளுடன் கூட்டுச்சேரமாட்டோம். உதாரணமாக மகிந்தவின் மொட்டுக்கட்சியுடன் சேரமாட்டோம். கூட்டாட்சியூடாக அனைவரினதும் சம்மதத்துடன் தவிசாளர் பிரதிதவிசாளர் தெரிவு இடம்பெறும்.

கேள்வி: அம்பாறை மாவட்டத்தின் முகவராக இருக்கிறீர்கள். உங்களது சொந்த ஆலையடிவேம்பு சபையினதும் சம்மாந்துறை சபையினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்ததே. காரணம் என்ன?

ஆலையடிவேம்பு சபையினூடாக எமது பலத்தை உலகிற்கும் எமது கட்சிக்கும் எடுத்துக்காட்டவேண்டும் என்பதற்காக தரமான வேட்பாளர்களை நியமித்திருந்தேன்.

ஆனால் துரதிஸ்டவசமாக அம்பாறைக்கச்சேரியில் நான்போய் அரசஅதிபரிடம் பேசிக்கொண்டிருந்தவேளையில் என்னுடன் வந்த பிரமுகர் வேட்புமனுவை நீட்டிவிட்டார். மறுகணம் அந்தஇடத்தில் நான் சொன்னேன். தவறுதலாக அவர்தந்துவிட்டார் என்று. அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

கேள்வி: கல்முனை மாநகரசபை கூட்டாட்சி பற்றி பரவலாக கதையடிபடுகின்றது. அங்க உங்களது வியூகம் எவ்வாறு அமையும்?

எமது நீண்டகால பிரதேசசெயலக தரமுயர்த்தல் பிரதேசபை உருவாக்கம் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளில் கல்முனைவாழ் தமிழ்மக்களின் அபிலாசைகளுடன் ஒத்துப்போகின்ற குறிப்பிட்ட காலஅட்டவணையினுள் நிவர்த்தி செய்வோமென கைச்சாத்திடும் எந்தக்கட்சியுடனும் கூட்டாட்சிஅமைப்போம்.

கேள்வி: காரைதீவு பிரதேசசபை கன்னித்தேர்தலில் 2006இல் ததேகூட்டமைப்பிற்கு 6059வாக்குகளும் 2011இல் 4284 வாக்குகளும் கிடைத்தது. த.அ.கட்சிக்கோட்டையான காரைதீவில் இம்முறை ஆக 3202 வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளது. இது பாரிய சரிவு இல்லையா?

அது இந்த கலப்புமுறைத் தேர்தல்முறைமையின் விளைவே தவிர அது சரிவல்ல. இந்ததேர்தல் குடும்ப ஆதிக்கம் குடும்பச்செல்வாக்குடன் தனிநபர் மற்றும் கட்சி செல்வாக்கும் சேர்ந்தது.

கேள்வி: அப்போ . அது சரிவில்லையா?

பாரிய சரிவல்ல. சிறுசரிவுதான். ஆனால் நாம் அமைத்த வியூகத்தின் பயனாகவே சுயேச்சை மற்றும் நாம் இணைந்து 6 ஆசனங்களைப் பெறமுடிந்தது. இதனையே அன்று மகாசபையிடம் சொன்னேன்.

கேள்வி: சரி அப்படியெனின் காரைதீவில் எவ்வாறு கூட்டாட்சி அமைப்பீர்கள்? உங்கள் வியூகம் என்ன?

காரைதீவின் புதல்வர்கள்தான் த.தே.கூட்டமைப்பிலும் சுயேச்சையிலும் கேட்டார்கள். அவர்களும் தேசியத்திற்காக உழைத்தவர்களே. நாம் யாரையும் பிரித்துப்பார்க்கவில்லை.

எனவே நாம் சுயேச்சையுடன் இணைந்து மேலுமொரு ஆசனத்துடன் ஆட்சியமைப்போம். தேர்தல் முடிந்துவிட்டது. எமது காரைதீவு அபிவிருத்திதான் இனி எமது இலக்கு.

கேள்வி: அம்பாறை தமிழ் சபைகளில் வழமைக்கு மாறாக சு.கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருக்கின்றது. ஒருநாளும் இல்லாத காரைதீவில் 2ஆசனங்கள் ஆலையடிவேம்பில் 5ஆசனங்கள் திருக்கோவிலில் 3ஆசனங்கள் நாவிதன்வெளியில் ஓரு ஆசனத்தையும் பெற்றுள்ளதே. இது உங்களின் பலவீனமா? அல்லது அவர்களை தமிழ் மக்கள் ஏற்றுள்ளார்களா?

இதுவும் ஒருவகையில் கலப்புமுறைத்தேர்தலின் விளைவுகளில் ஒன்றுதான். குடும்பச்செல்வாக்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளது. தனிநபர் செல்வாக்கும்அதில் உள்ளடக்கம்.

கேள்வி: இத்தேர்தலில் கூடுதலாக கையூட்டல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதே?

இத்தேர்தலில் என்றுமில்லாதவாறு பணம் செலவழிக்கப்பட்டிருக்கின்றது என்பது உண்மை. தேர்தல் அணையாளரே கூறயிருக்கிறார்.

குடும்பத்திற்கு 5ஆயிரம் வரைகொடுத்துள்ளனர். பல பொருட்கள் கொடுத்துள்ளனர். கறன்ட்பில் கட்டியிருக்கிறார்கள். ஒரு வாக்கிற்கு 200ருபா வழங்கியுள்ளனர். இப்படி பல கையூட்டல்கள்.

கேள்வி: இறுதியாக. த.தே.கூட்டமைப்பு ஒரு சுயமதிப்பீடு செய்துகொண்டு அபிவிருத்தி காணத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா?

நிச்சயமாக. ஒரு முடிவு வருகின்றபோது அதுதொடர்பாக ஆராய்ந்து சாதக பாதகங்களை அறிந்து எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கட்டாயமுள்ளது. நிறைய அனுபவமுள்ளவர்களுள்ளனர். அதனைச்செய்வார்கள் என்றார்.