மகிந்த கேள்விக்குறியாகாமல்? ஆச்சரியக்குறியாகிவிடுவார்! தமிழகத்திலிருந்து எச்சரிக்கை மணி

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மக்கள் வழங்கிய ஆணையை மீறி செயற்பட்டால் இலங்கையில் மீண்டும் மஹிந்தவின் கையே மேலோங்குமென தமிழகத்திலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளிதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தமிழர்களுக்கான அரசியல் உரிமை, வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான உரிமை பற்றி வழங்கப்பட்ட வாக்குறுதிகளையும் நினைவுகொள்ளவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"இலங்கையில் சமீபத்தில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டுமே தோல்வியைத் தழுவி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபட்ஷவின் ஆதரவுடனான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றியடைந்திருக்கிறது.

அதனால், இலங்கையில் மீண்டும் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து 2015இல் ஆட்சியமைத்தபோது, இலங்கை புதிய சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு பரவலாகவே இருந்துவந்தது.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏறத்தாழ ஒரு சர்வாதிகார ஆட்சியாகவே இருந்து வந்த இலங்கையில் அரசமைப்பு அமைப்புகள் முடங்கிக் கிடந்தன.

மீண்டும் சுதந்திரத்தையும் அரசமைப்பு அமைப்புகளின் அதிகாரங்களையும் மீட்டெடுப்போம் என்கிற உறுதிமொழியுடன்தான் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்த கூட்டணி மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியமைத்தது.

2015இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வெற்றி பெற்றதும், அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க கூட்டணி வெற்றி பெற்றதும் மாற்றத்திற்காக இலங்கை மக்கள் அளித்த வாக்கு என்பதை மறந்துவிடக் கூடாது.

அதுவரை எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தாலும்கூட, ஆரம்பம் முதலே அவர்களுக்கிடையேயான உறவு சுமுகமாக இருக்கவில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி ஆட்சியில் இருந்தும்கூட, தனித் தனியாகப் போட்டியிட முடிவெடுத்ததுதான் இப்போது தற்கொலை முயற்சியாக முடிந்திருக்கிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணில் ஆகியோரின் கட்சிகள் தேர்தலில் வெற்றிபெற்றால் அதன் விளைவாக மீண்டும் தமிழீழம் கோரிக்கை எழுப்பப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வலியுறுத்தியது கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

ஆனால், அவரது பிரசாரம் தென்னிலங்கையைச் சார்ந்த சிங்களர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதும் அதன் விளைவாக, மஹிந்தவின் ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மஹிந்தவின் ஆதரவைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது என்றால், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியும், மைத்திரியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இரண்டாவது மூன்றாவது இடங்களைத்தான் பிடிக்க முடிந்தது

அதன் விளைவாக மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலங்கையில் ஆதரவு அதிகரித்து வருவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது.

அரசியலில் இதுபோன்ற தோற்றங்கள் வலுப்பெறக் கூடும் என்பது உண்மைதான் என்றாலும், உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மக்களின் மனமாற்றத்துக்கான அறிகுறி என்று கூறிவிட முடியாது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றிருக்கும் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பெற்றிருக்கும் மொத்த வாக்குகளைவிடக் குறைவாகவே காணப்படுகிறது.

2015இல் ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இப்போது தனித்தனியாகப் போட்டியிட்டன என்பதை மறந்துவிடக் கூடாது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஆளும் கூட்டணியில் கடுமையான அதிருப்தி ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பலர் பிரதமர் ரணில் பதவி விலக வேண்டும் என்று வெளிப்படையாகவே கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கூட்டணியில் இருந்து விலகித் தனியாகவே ஆட்சி அமைத்தால் என்ன என்கிற எண்ண ஓட்டத்துக்கு மாறியிருக்கிறார்கள்.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 106 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி தனிப்பெரும்பான்மை அடைய இன்னும் ஏழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் போதும் என்கிற நிலையில், அதற்கான முயற்சியில் களமிறங்கி இருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி.

43 உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 52 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் இரகசியத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ரணிலை அகற்றிவிட்டு ஆட்சியமைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல என்பதைத் தெரிந்துகொண்டதால் இப்போது சமரசப் பேச்சுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இறங்கிவந்திருப்பது மட்டுமல்லாமல், இருதரப்பும் அரசியல் நெருக்கடியைத் தவிர்க்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் தங்களது கருத்து வேறுபாடுகளைக் களைந்து, 2015இல் மக்கள் அவர்களது கூட்டணி மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும்.

உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு முழு உரிமைகளுடனான மறுவாழ்வும், வடக்கு - கிழக்கு மாகாணங்களின் மாநில உரிமைகளுக்கான உத்தரவாதமும் தரப்படும் என்கிற அவர்களது உறுதிமொழிதான் 2015இல் வெற்றியைத் தேடித்தந்து அவர்களை ஆட்சியில் அமர்த்தின என்பதை மறந்துவிடக் கூடாது.

அவர்கள் இருவரும் தங்களது கடமையில் தவறினால் 'மீண்டும் மஹிந்த' என்பது கேள்விக்குறியாக இல்லாமல், ஆச்சரியக் குறியாக மாறிவிடக் கூடும்" என்று அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.