தேசிய அரசாங்கம் தொடர்பான ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்துங்கள்! உதய கம்மன்பில

Report Print Aasim in அரசியல்

தேசிய அரசாங்கம் தொடர்பான ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், தான் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துள்ளதாக பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபாநாயகரும் அதனை ஏற்றுக் கொண்டு அரசாங்கத்தை தொடர அனுமதிக்கின்றார்.

தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்றப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும். அதற்குத் தேவை சாதாரண பெரும்பான்மை மட்டுமே.

அந்த வகையில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக் கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கம் தொடர்பான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் எந்தக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்ற விபரமும் வௌிப்படுத்தப்பட வேண்டும்.

தேசிய அரசாங்கம் அமைந்தால் மாத்திரமே 30க்கு மேற்பட்ட அமைச்சர்களை நியமிக்க முடியும். அதற்காக யாரும் வாய்ச் சொல் மூலம் தேசிய அரசாங்கம் அமைப்பதாக தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவ்வாறு செய்தால் எதிர்காலத்திலும் அமைச்சுப் பதவிகளை அதிகரிக்க இந்த நடைமுறை முன்னுதாரணமாக கைக்கொள்ளப்படும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.