சம்பந்தனின் பதவியை பறிக்க மகிந்த தரப்பு வகுக்கும் வியூகம்!

Report Print Rakesh in அரசியல்

மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசின் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீண்டும் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்களின்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கவேண்டுமென வலியுறுத்தப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலையடுத்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி அரசொன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் இணக்கப்பாட்டு பேச்சுகள் சு.க. தரப்பில் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், பேச்சுகளில் இணக்கப்பாடு எட்டப்படாமை, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு ஐ.தே.க. எதிர்ப்பு வெளியிட்டமை மற்றும் ஐ.தே.க. தனி அரசொன்றை அமைக்க முற்பட்டமை உட்பட பல்வேறு காரணங்களால் தேசிய அரசை தொடர்ந்து கொண்டுசெல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக தாம் முன்னெடுத்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்று தொடர்ந்தும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நடத்த மஹிந்த அணியினர் தீர்மானித்துள்ளனர்.

இந்தப் போராட்டங்களின்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கவேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக இருக்கும் என அறியமுடிகின்றது.