அமைச்சரவை மாற்றம் முற்பகல் 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில்...

Report Print Samy in அரசியல்
154Shares

இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இன்று அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பொறுப்பேற்கவுள்ளனர்.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐதேக தரப்பில் கபீர் காசிமிடம் உள்ள பொது தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு, லக்ஸ்மன் கிரியெல்லவிடம் கையளிக்கப்படும் என்றும், லக்ஸ்மன் கிரியெல்லவிடம் உள்ள நெடுஞ்சாலைகள், மற்றும் உயர்கல்வி அமைச்சு, கபீர் காசிமிடம் கையளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி சமரவீர, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவாழ் உயிரினங்கள் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

சாகல ரத்நாயக்கவிடம் இருந்த சட்டம், ஒழுங்கு அமைச்சு மீளப் பெறப்பட்டு, தெற்கு அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு வழங்கப்படலாம் என்றும், சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, நிதி அமைச்சராக மங்கள சமரவீரவே தொடருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹர்ஷ டி சில்வா, அஜித் பெரேரா, சுஜீவ சேனசிங்க, ஆகியோருக்கு சுதந்திரமான அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

ஏனைய அமைச்சரவை நிலையிலுள்ள அமைச்சர்களின் பொறுப்புகளில் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் அமைச்சுக்களிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

விவசாய அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்படலாம் என்றும், தற்போதைய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயக்க திறன் விருத்தி கைத்தொழில் பயிற்சி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திம வீரக்கொடி புதிய கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று கூறியிருந்த சுசில் பிரேம ஜயந்த இன்று ஜப்பானுக்குப் பயணமாகவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Puthinappalakai