மகிந்த மீதான விமர்சனமே தோல்விக்குக் காரணம்!

Report Print Aasim in அரசியல்
166Shares

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச மீதான விமர்சனமே உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் சுதந்திரக் கட்சி சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சி தோல்வியுற்றதற்கு கட்சியில் ஒருசிலரின் பேச்சுக்களே காரணம். அவர்கள் தேவையற்ற விடயங்களை பேசி கட்சியை தோல்விப் பாதையில் இட்டுச் சென்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவை சிறைச்சாலைக்கு அனுப்ப வேண்டும், அவரின் குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்பன போன்ற பேச்சுக்கள் அவ்வாறான சிலவாகும்.

அதனை நான் கூட விரும்பமாட்டேன். முன்னாள் ஜனாதிபதி மீது எங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் எந்தப் பகையும் இல்லை.

இவ்வாறான நிலையில் சாதாரண பொதுமக்கள் சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகளின் அநாவசிய பேச்சுக்கள் காரணமாக மகிந்த ராஜபக்சவை பாதுகாக்கும் நோக்கில் அவரின் கட்சிக்கு பாரியளவில் வாக்களித்துள்ளார்கள்.

ஆனால் இந்த வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற போதுமானதல்ல.

நாங்கள் பொது வேட்பாளராக போட்டியிட்டால் மஹிந்த தரப்பில் யார் போட்டியிட்டாலும் 45 வீத வாக்குகளைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவே முடியாது என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.