காணாமல் போனோர் செயலகத்திற்கான ஆணையாளர்களுக்கு ஜனாதிபதி அனுமதி

Report Print Steephen Steephen in அரசியல்

காணாமல் போனோர் தொடர்பான செயலகத்திற்காக அரசியலமைப்பு பேரவை பரிந்துரைத்த ஆணையாளர்களின் பெயர் பட்டியலுக்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக ஜனாதிபதி செயலகம், அரசியலமைப்பு பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான செயலகம் குறித்த சட்டமூலம் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது. செயலகத்திற்கான ஆணையாளர்கள் நியமனத்தில் இணக்கம் ஏற்படாத காரணத்தினால், செயலகம் இயங்குவது தாமதமாகி வந்தது.

அரசியலமைப்பு பேரவை விண்ணப்பங்கள் கோரியிருந்ததுடன் 8 பேரின் பெயர்களை தெரிவு செய்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தது.

இதற்கு தற்போது ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதால், காணாமல் போனோர் தொடர்பான செயலகம் தனது பணிகளை ஆரம்பிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. இதனால், காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்கும் முன்னேற்றம் குறித்து பேரவையில் அறிக்கையிட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை ஏமாற்ற நீண்டகாலம் தாமதித்து காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.