ஒரு வாரம் மட்டுமே ரணில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவி வகிப்பார்?

Report Print Steephen Steephen in அரசியல்
800Shares

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு வார காலத்திற்கு மாத்திரமே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சரத் பொன்சேகாவை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பது தொடர்பில் பிரதமரின் செயலகம் அண்மையில் சமூக வலைத்தளம் ஊடாக கருத்துக்களை கேட்டிருந்ததுடன் 90 வீதமானவர்கள் பொன்சேகாவுக்கு அந்த பதவியை வழங்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.

சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்ற விருப்பம் பிரதமருக்கு உள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், அமைச்சர் ராஜித சேனாரத்னவை அழைத்த பிரதமர், தனக்கு கிடைத்த ஊழல் சம்பந்தமான 30 கோப்புகளை வழங்கியுள்ளதுடன் சரத் பொன்சேகாவுடன் இணைந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

சரத் பொன்சேகாவுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வழங்கப்படுவது தொடர்பில், ராஜபக்ச தரப்பினரே அச்சத்தில் உறைந்திருந்தனர்.

பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகள் சிலரும் நேற்று சரத் பொன்சேகாவுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்ததாக பேசப்படுகிறது.

ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் ஒரு அணியில் திரண்டு பொன்சேகாவுக்கு எதிராக செயற்பட்டு வருவதன் மூலம் அவரே, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவிக்கு தகுதியானவர் என்பதை வெளிக்காட்டியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, சரத் பொன்சேகா வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாகவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டதாக தெரியவருகிறது. இந்த நிலையில், அடுத்த மாதமும் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.