நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்கள். இதன் போது ஒரு சில அமைச்சர்களிடம் இருந்த அமைச்சு பொறுப்புகள் பறிக்கப்பட்டு வேறு நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவை மாற்றத்தின் போது கட்சி தலைவர்கள் சிலருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவிருப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான ஆசனங்களை கைப்பற்ற காரணமாக இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது குறித்த இருவருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கப்படும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது.
எனினும், இந்த எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கு அமைச்சு பதவியேதும் வழங்கப்படவில்லை.
எவ்வாறாயினும், அண்மையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கத்திற்கு பிரதி அமைச்சர் பதவியொன்று வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.