மகிந்தவை நம்பவில்லையா சீனா?

Report Print Hariharan in அரசியல்
251Shares

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றுவதில் தீர்க்கமான பங்கை வகித்திருந்த சர்வதேச சமூகம் தற்போதைய கூட்டு அரசாங்கத்தைக் காப்பாற்றுவதிலும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கும் ஏற்பட்ட பெரும் பின்னடைவு இலங்கையின் அரசியல் தலைவிதியையே மாற்றிவிடக் கூடிய நிலை ஒன்றுக்கு இட்டுச் சென்றிருந்தது.

உள்ளூராட்சித் தேர்தல் என்ன, குப்பைகளை அகற்றுவதற்கும் வீதிகளைச் செப்பனிடுவதற்கும் தானே என்ற ஏளனமான கருத்துக்குச் சவால் விடும் வகையில் அமைந்திருந்தது அண்மைய தேர்தல்.

இந்தத் தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் ஓர் அரசாங்கத்தை மாற்றும் வல்லமையைக் கொண்டதாகவும் மாறியிருந்தது.

மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விகரமசிங்கவும் இணைந்து உருவாக்கிய கூட்டு அரசாங்கத்தை விளிம்பு நிலைக்குக் கொண்டு சென்றிருந்தது இந்தத் தேர்தல் முடிவு.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் எதிரணியினதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதும் திட்டம் நிறைவேறியிருந்தால் உள்ளூராட்சித் தேர்தல்கள் கூட நாட்டின் அரசியல் தலைவிதியை மாற்றி எழுதக் கூடும் என்ற வரலாறு உருவாக்கப்பட்டிருக்கும்.

கூட்டு அரசாங்கம் காப்பாற்றப்பட்டுள்ளதால் அத்தகையதொரு நிலை உருவாகாவிடினும் உள்ளூராட்சித் தேர்தலும் கூட அரசாங்கத்தை ஆட்டி வைக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்தக் கூட்டு அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியவுடன் அமெரிக்கத் துதுவர் அதுல் கெசாப் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, சீனத் தூதுவர் செங் சுவேயுவான், பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் போன்ற வல்லமை பொருந்திய நாடுகளின் இராஜதந்திரிகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

அந்தப் பேச்சுக்கள் பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படாத போதிலும் அவர்களின் இலக்கு கூட்டு அரசாங்கத்தைப் பாதுகாப்பதை மையப்படுத்தியதாகவே இருந்தது.

மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றி மைத்திரிபால சிறிசேன ரணில் விகரமசிங்க இணைந்த கூட்டு அரசாங்கத்தை உருவாக்கிய மேற்குலக நாடுகளும் இந்தியாவும் மீண்டும் அதே அரசாங்கத்தைப் பாதுகாக்கவும் களமிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

தம்மை ஆட்சியில் இருந்து நீக்கியது இந்தியப் புலனாய்வு அமைப்பும் அமெரிக்காவுமே என மகிந்த ராஜபக்சவே கூறியிருக்கிறார். இதே கருத்தை அவரது சகோதரர்களான பசில் ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் கூட வெளியிட்டிருந்தனர்.

மீண்டும் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவதையோ அல்லது அவரது ஆதரவுடன் நிமல் சிறிபால டி சில்வாவைப் பிரதமராகக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைப்பதையோ மேற்குலகம் விரும்பவில்லை.

காரணம் அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட பாதையாகவே அது இருக்கும் என்பது மேற்குலக நாடுகளின் கருத்தாக உள்ளது.

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை மேற்குலகமோ இந்தியாவோ விரும்பாமல் இருப்பதற்குக் கூறப்படுகின்ற சில காரணங்கள் வியப்பானவையாகவே இருக்கின்றன.

மகிந்த ராஜபக்ச ஈட்சிக்கு வந்தால் தற்போதைய கூட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகள் முடங்கிப் போய்விடும். அரசியலமைப்பு மாற்றம் தடைப்பட்டு விடும். இவையே மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு மேற்குலகம் கூறியிருக்கின்ற காரணம்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக இடைவெளி மற்றும் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அரைகுறை நல்லிணக்க முயற்சிகளும் கேள்விக்குள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் இப்போதைய அரசாங்கம் முன்னெடுத்த இந்த நடவடிக்கைகளை ஆபத்தானதாகவும் புலிகளின் மீள் எழுச்சிக்கு வித்திடும் என்றும் மகிந்த அணியினர் விமர்சித்திருந்தனர். எனவே அவர்கள் அதிகாரத்துக்கு வந்தாலும் இதனைத் தொடர முடியாது.

அதுபோலவே பொறுப்புக்கூறல் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத போதிலும் அதற்கான வாக்குறுதிகளை சர்வதேச சமூகத்திடம் கொடுத்திருக்கிறது.

அது நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால் மீறல்கள் நிகழ்ந்திருப்பதை ஏற்றுக்கொண்டு அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாவது கூறியிருக்கிறது.

ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது ஒருபோதும் மீறல்கள் நிகழ்ந்ததை ஏற்றுக் கொண்டதுமில்லை, அதற்குப் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக குறைந்த பட்சம் வாக்குறுதிகளைக் கொடுக்கவும் கூடத் தயாராக இருக்கவில்லை.

எனவே மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்துக்கு வந்தால் பொறுப்புக்கூறலுக்கான எந்த நகர்வுகளும் எடுக்கப்படாமல் முடங்கிப் போகும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தக் காரணங்களை முன்னிறுத்தியே தற்போதைய அரசாங்கத்தைப் பாதுகாக்க முனைவது போல மேற்குலகம் காட்டிக் கொண்டாலும் இவையே முழுமையான காரணங்கள் அல்ல.

மகிந்த ராஜபக்சவை வெளியேற்றிய நடவடிக்கையிலாகட்டும் அவரது அண்மைய அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கையிலாகட்டும் அதற்கு அப்பாலும் சில காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. அவை பூகோள மற்றும் பிராந்திய அரசியலின் பால் தொடர்புடைய விடயங்கள்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வரும்போது பிராந்திய அரசவியலில் சீனாவின் செல்வாக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இலங்கையில் ஏற்கனவே சீனா தனது முதலீடுகளின் மூலம் ஒரு பலமான தளத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறது.

இலங்கையில் சீனாவின் பொருளாதாரத் தலையீட்டை வெறுமனே வியாபார நோக்குடையதாகக் கூற முடியாது. அதேவேளை இலங்கையில் சீனா கொட்டுகின்ற நிதி தனியே அந்த நாட்டு முதலீடுகள் மாத்திரமன்றி இலங்கையர்களின் தலையின் மீது ஏற்றி விடப்படும் கடன் சுமையுமேயாகும்.

ஒரு நாட்டைக் கைப்பற்றுவதற்கு அல்லது அடிமைப்படுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வாள், இன்னொன்று கடன். இந்தக் கருத்தைக் கூறியவர் அமெரிக்க அரசியலாளரான ஜோன் அடம்ஸ்.

இவர் 1797ம் ஆண்டு முதல் 1801ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகள் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர். அவரது இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் இலங்கை உள்ளிட்ட நாடுகளை தன்வசப்படுத்திக் கொள்வதற்காக கடன் என்ற ஆயுதத்தையே பயன்படுத்திக் கொள்கிறது.

மூலோபாயச் சொத்துக்களை கட்டுப்படுத்துவதற்கும் செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்வதற்கும் சீனா கடன்களைப் பயன்படுத்திக் கொள்கிறது என்ற கருத்து இப்போதைய அரசியலாளர்கள் மத்தியில் உள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடுகளும் செல்வாக்கும் அதிகரிக்கும் போது தற்போதைய அதிகாரச் சமநிலையில் குழப்பம் ஏற்படும். அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே வெளிப்படத் தொடங்கிவிட்டன.

சீனாவைக் கட்டுப்படுத்துதல் மேற்குலகிற்கும் இந்தியாவுக்கும் இப்போது முதன்மையான தேவையாகவும் தெரிவாகவும் மாறியிருக்கிறது. இங்கிருந்தே கொழும்பின் அதிகார மோதல்களையும் அதில் புறத் தலையீடுகளையும் கணிக்க வேண்டியிருக்கிறது.

கொழும்பில் அதிகார மாற்றம் ஒன்றுக்கான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போது ஏற்பட்ட குழப்பம் அமெரிக்கா இந்தியா பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஒருவேளை மகிந்த ராஜபக்சவோ அல்லது மகிந்த ராஜபக்சவின் ஆதரவுடனான அரசாங்கத்தை அமைத்தால் தற்போதைய அரசின் திட்டங்கள் எல்லாமே திசை திருப்பப்பட்டு விடும் என்று அந்த நாடுகள் கலக்கமடைந்தன.

மகிந்த ராஜபக்சவை தமது நண்பனாகவோ தமக்குச் சாதகமான ஒரு ஆட்சியாளராகவோ பார்க்க மேற்குலகமும் இந்தியாவும் தயாராக இல்லை. அதனால் தான் அவர் அதிகாரத்துக்கு வருவதை மீண்டும் தடுக்கின்ற முனைப்புக்களில் அவை ஈடுபட நேரிட்டது.

அதேவேளை இதே கவலை சீனாவுக்கும் இருந்ததா என்பது கேள்விக்குறி. ஏனென்றால் சீனத் தூதுவரும் கூட அரசியல் நெருக்கடியின் உச்சத்தில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்துப் பேசினார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் சீனாவின் முதலீடுகளுக்கு ஆபத்து ஏற்படாது என்ற உறுதிமொழி சீனத் தூதுவரால் பெறப்பட்டது. இந்தத் தகவலை சைனா ரைம்ஸ் ஊடகம் வெளியிட்டிருந்தது.

மகிந்த ராஜபக்ச சீனாவின் நண்பன் என்று சொல்லப்பட்டாலும் மகிந்தவின் ஆட்சி மீண்டும் ஏற்பட்டால் தமது முதலீடுகளுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற கவலை சீனாவுக்கும் இருக்கிறது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கிய விடயத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே மகிந்த ராஜபக்ச இருந்து வருகிறார்.

தாம் ஆட்சியமைத்தால் அம்பாந்தோட்டை துறைமுகம் மீளப் பெறப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இது சீனாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

அதேவேளை இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட போது அமெரிக்க - இந்தியளத் தூவர்கள் ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்தமைக்கும், சீனத் தூதுவர் அவர்களைச் சந்தித்தமைக்கும் வேறுபாடுகள் உள்ளன.

சீனா எப்போதுமே பிற நாடுகளின் அரசியல் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று கூறிக் கொள்ளும் நாடு. அப்படியான நிலையில் சீனத் தூதுவர் உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிட முனைந்தமை முக்கியமானதொரு விடயம்.

அரசியல் ரீதியாகவும் இலங்கையில் சீனா தலையிட ஆரம்பித்துள்ளது என்பதற்கான அடையாளம் இது. ஆனால் இது மகிந்தவுக்குச் சாதகமாக இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது.

மகிந்த ராஜபக்சவை சீனாவே இயக்குகிறது என்றும் சீனாவின் நெறிப்படுத்தலிலேயே அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்புகளில் அவர் ஈடுபட்டதாகவும் ஒரு கருத்து உள்ளது.

அவ்வாறாயின் அதிகார மாற்றம் ஒன்று ஏற்பட்டால் சீனாவின் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீனத் தூதுவர் ஏன் போக வேண்டும்? இது சிந்திக்க வேண்டிய விடயம்.

இந்த நிலையில் வைத்துப் பார்க்கின்ற போது மகிந்த ராஜபக்சவை சீனாவும் நம்பவில்லை என்றும் கருதத் தோன்றுகிறது.

இப்போதைய நிலையில் கொழும்பில் அதிகார மாற்றம் நிகழ்வதை உலகின் முக்கிய வல்லாதிக்க நாடுகள் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

இவர்களின் விருப்பத்தை மீறி ஓர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதே மகிந்தவுக்கான இப்போதைய சவால். 2015ல் மாத்திரமன்றி 2018லும் ஆட்சியைப் பிடிக்கின்ற கனவுக்கு சர்வதேச சமூகமே சிக்கலாக மாறியிருக்கிறது.

இந்த நிலை நீடிக்கும் வரை ரணிலின் காட்டில் மழையாகத் தான் இருக்கும்.