இரு தசாப்தங்களின் பின் ஐ.தே.க. தலைமைப் பதவியில் மாற்றம்!

Report Print Rakesh in அரசியல்
2342Shares

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகத் தென்படுகின்றது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததையடுத்து தலைவர் பதவி உட்பட கட்சியின் உயர்பதவிகளில் மாற்றம் அவசியம் என்று அக்கட்சியின் உறுப்பினர்களே குரலெழுப்பி வருகின்றனர்.

இதற்கு கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க ஆரம்பத்தில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும், பிரதமர் பதவியில் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கட்சிக்குள் ஏற்படவேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

ஒருமாத காலத்துக்குள் கட்சிக்குள் மாற்றம் இடம்பெற்று, தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்காவிட்டால் தொகுதி அமைப்பாளர் பதவியைத் துறப்போம் என்று 50 இற்கும் மேற்பட்ட தொகுதி அமைப்பாளர்கள் ஐ.தே.கவின் தலைமைப்பீடத்துக்கு அறிவித்துள்ளனர்.

தலைவர் பட்டியலில் கரு ஜயசூரியவின் பெயரும் இருக்கின்றது. எனினும், சஜித்துக்கு அந்தப் பதவி கிடைக்கும் என்றே கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்கும் நோக்கில் இளம் உறுப்பினர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், சிரேஷ்ட தலைவர் பதவியொன்று உருவாக்கப்பட்டு, அது ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக கட்சியின் யாப்பிலும் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை,1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.