இலங்கை அரசுக்கு காய்ச்சல் எடுப்பது வழக்கமான ஒன்றுதான்!

Report Print Samy in அரசியல்
153Shares

ஐக்கிய நாடுகள் சபையின் 37வது கூட்டத் தொடர் சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை ஆரம்பமாகிறது. நாளை ஆரம்பமாகும் இந்தத் தொடர் அடுத்த மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஜெனீவா கூடுகிறது என்றாலே இலங்கை அரசுக்கு காய்ச்சல் எடுப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த வரிசையில் இம்முறையும் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் சில அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

வழக்கம்போல் மகிந்தவுக்கு ஆதரவான புராணங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டு அரசுக்கு எதிரான பரப்புரைகள் விரைவு கதியில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், அவர் தலைமையிலான அரசையும் கூட்டு அரசு ஜெனீவாவில் காட்டிக்கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் படுதோல்வியே கிடைத்தது.மகிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன இமாலய வெற்றியைப் பெற்றிருந்தது.

இதனால் கூட்டுஅரசு, மகிந்தவைக் காட்டிக் கொடுத்து தமது அரசியல் இருப்பைத் தக்க வைக்க, அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளும் என்றவாறாக அமைந்துள்ளது அவரின் கருத்து.

இவ்வாறு பேரினவாதத் தலைவர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை வைத்துள்ளனர். கருத்துக்கள் அத்தனையும் கூட்டுஅரசின் செயற்பாடுகளை முடக்குகின்ற அல்லது தடைபோடுகின்ற வகையில்தான் அமைந்துள்ளன.

கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற 36வது கூட்டத் தொடரில், போர்க் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த இலங்கைக்கு இரண்டு வருடங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் எவ்விதமான காத்திரமான நகர்வுகளும் முன்னெடுக்கப்படவில்லை.

அவகாசத்தின் பாதிப்பகுதி முடிந்து விட்ட நிலையில் இந்தக் கூட்டத் தொடரை எதிர்கொள்கிறது இலங்கை. போர்க் குற்றம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள, முன்னெடுக்கப்படுகின்ற நகர்வுகள் அல்லது அது தொடர்பில் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து இந்த வருடம் இலங்கை அரசு மீது பன்னாட்டுச் சமூகத்தால் கேள்விக் கணைகள் தொடுக்கப்படலாம்.

இலங்கை தொடர்பில் 32 பக்க மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்கனவே வந்துள்ள தகவல், இலங்கை மீது சர்வதேச சமூகம் கழுகின் நிலையில் இருந்து தனது பார்வையை வைத்துள்ளது என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

இத்தகைய பின்னணியில் இந்த வருடத்துக்கான ஜெனீவாக் கூட்டத்தை கூட்டு அரசு எதிர்கொள்வதென்பது நிகழ்காலத்தைப் பொறுத்த வரையில் அதற்கும் கடந்த காலத்தைப் பொறுத்த வரையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் உதறலை ஏற்படுத்தவே செய்யும்.

படையினரிடம் உள்ள காணிகளை விடுவிக்கக் கோரி தமிழ் மக்களால் தொடர்ந்து நடத்தப்படும் போராட்டம், அரசியல் கைதிகளில் விடுதலையை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டம் ஆகிய அனைத்துப் போராட்டங்களும் ஒன்று சேர்ந்து கூட்டு அரசை பன்னாட்டுச் சமூகத்தின் மத்தியில் பலவீனப்படுத்தவே செய்யும்.

ஆக, மகிந்த அணியையும் அவரின் விசுவாசிகளையும் சமாளித்தல், பன்னாட்டுச் சமூகத்தைத் திருப்திப்படுத்தல் ஆகிய இருமுனைப் போராட்டத்தில் கூட்டுஅரசு சிக்கியுள்ளது.

சர்வதேச சமூகம் ஒன்றை மட்டும் செய்யக் கூடாது என்று தமிழர் தாயக மக்கள் விரும்புகின்றனர். அவகாச நீடிப்புக்களை அனுமதிக்கக்கூடாது என்பதே அது. மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கத்தான் செய்யும்.