ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய டுபாய் சென்ற அதிகாரிகள் இன்று வெறுங்கையுடன் திரும்பி வந்துள்ளனர்.
டுபாயில் தடுத்து வைக்கப்பட்ட உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக சர்வதேச பொலிசாரின் சிவப்பு எச்சரிக்கையுடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மற்றும் பொலிஸ் நிதிமோசடிப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி. பிரியந்த ஆகியோர் டுபாய் சென்றிருந்தனர்.
அந்நாட்டின் சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் தலைவர் ஆகியோரை சந்தித்து உதயங்க வீரதுங்கவை தங்களிடம் கையளிக்குமாறு இலங்கை சார்பில் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும், அவர் தங்கியுள்ள இடத்தை தம்மால் கண்டறிய முடியாதுள்ளதாக டுபாய் அதிகாரிகள் கைவிரித்துள்ளனர்.
இதன் காரணமாக இரண்டு அதிகாரிகளும் இன்று வெறுங்கையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
முன்னதாக டுபாய் சென்ற குழுவுடன் வெளிநாட்டமைச்சர் திலக் மாரப்பனவும் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்த நிலையில் கடைசி நேரத்தில் அவர் டுபாய் பயணத்திலிருந்து விலகிக் கொண்டிருந்தார்.