மஹிந்தவின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்ன?

Report Print Vethu Vethu in அரசியல்
163Shares

எதிர்வரும் மாகாண சபை தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தலிலும், தாமரை மொட்டின் கீழ் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளையும் தாமரை மொட்டின் கீழ் இணைத்துக் கொள்ள மஹிந்த திட்டமிட்டுள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் பங்காளி அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் மேற்கெள்வதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

சமகால அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுங்கள் என்ற தலைப்பின் கீழ் நாடு முழுவதும் பேரணி நடத்துவதற்கும் அதன் முதற்கட்ட பேரணி எதிர்வரும் 7ஆம் திகதி நுகேகொடயில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் நெருக்கடி மேலும் அதிகரிக்குமே தவிர அது முடிவுக்கு வரப் போவதில்லை. அரசாங்கத்தின் இந்த ஸ்திரத்தன்மை காரணமாக நாட்டு மக்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல், பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள அரசாங்கத்திற்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிலையான வேலைத்திட்டங்கள் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமையினால் பொருட்களின் விலை அதிகரித்து மக்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இளைஞர் வேலையற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி தேரதலில் தேசிய வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்த போதிலும் அதனை கண்டுக்கொள்ளாமல் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதாகவும், அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டங்களை தோல்வியடைய செய்வதே தமது நோக்கம் எனவும், மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.