மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இன்டர்போல் பொலிஸார் ஊடாக கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், மீன்பிடி நீரியல் வளங்கள் அமைச்சருமான மஹிந்த அமரவீர வீரகெட்டியவில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், இந்த அரசாங்கம் திருடர்களை தண்டிக்க உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த அரசாங்கத்தில் எந்தவொரு திருடர்களும் பாதுகாப்பு பெற முடியாது.
கடந்த காலங்களில் திருடர்களை பாதுகாப்பதாக எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அது எங்களுக்கும் அவமானமாக இருந்தது. அதன் காரணமாகவே கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கட்சி பெரும் பின்னடைவை எதிர்கொள்ள நேரிட்டது.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரியான அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பியோடிவிட்டார். சிங்கப்பூரிலும் இல்லை.
ஆனால் அவர் எந்த நாட்டில் ஔிந்திருந்தாலும், யாருடைய ஆசீர்வாதத்துடன் மறைந்து இருந்தாலும் இன்டர்போல் பொலிஸார் ஊடாக அவரை நாங்கள் இலங்கைக்கு கொண்டுவருவோம்.
நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்காமல் ஓயமாட்டோம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்திக் கூறியுள்ளார்.