ஈழத் தமிழினம் தன்னை எப்படி மாற்றியமைக்கப் போகின்றது?

Report Print Samy in அரசியல்
178Shares

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்….’’ என்ற பாரதியாரின் பாடல் வரி இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் ஆழ வேரூன்றிக் காணப்படுகின்றது. அதாவது தமிழ் மக்களின் உடல் முழுவதும் குருதியுடன் கலந்த தேசிய உணர்வு வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

சுயநிர்ணய உரிமையையே எமது தமிழ் மக்கள் இன்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.‘‘பல வேடிக்கை மனிதரைபோல வீழ்வேனென்று நினைத்தாயோ’’ என்ற பாரதியாரின் கூற்றே, தமிழ் மக்களின் இன்றைய நிலையாகும்.

ஏனெனில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக சிங்கள அரசுகள் தமிழ் இனத்தின் மீது பயபக்தி வைத்திருந்தன. ஆனால் இன்று அவை தமிழினத்தை ஏளனமாகப் பார்க்கின்றன. இதற்கு எமது அரசியல் தலைவர்களின் சுய நலச் செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றது.

எனது உதட்டில் இருந்து உணர்ச்சிகள் வெளிப்படுவதில்லை. உள்ளத்தில் இருந்தே உணர்ச்சிகள் ஊற்றெடுக்கின்றன என்ற கூற்றுக்கு முற்றிலும் எதிர்மாறாக, இன்றைய காலகட்டத்தில் எல்லோருடைய உதடுகளில் இருந்தே உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படுகின்றனவே தவிர, உள்ளத்தில் இருந்து இனத்துக்கான உண்மையான உணர்ச்சிகள் வெளிப்படுவதில்லை.

இதனால் தமிழினத்தின் எதிர்காலம், இருள் சூழ்ந்ததாகவும், வளர்ச்சிப்பாதை வெறுமை கொண்டதாகவும், எழுச்சி நிலை ஏழ்மையானதாகவும் காணப்படுகின்றது.

தமிழினம் கல்வி, ஒழுக்கம், மொழி, பண்பாடு, கலாசாரம், கலை, பொருளாதாரம் என்பவற்றையெல்லாம் தொலைத்து விட்டு தனித்துவம் அற்ற கலப்பு முறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

இதுவே இன்றைய ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பும் ஆகும். இதனை உடனடியாகக் கைவிட்டு, உலகமயமாக்கலுக்கு ஏற்ப எம்மை நாம் மாற்றிக் கொண்டாலும் எமது இனத்தின் தனித்துவம், வரலாறு, தன்மானம், முதலீடு, கலைகள், பாரம்பரியம் என்பவற்றைப் பாதுகாத்து சுய பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

அதாவது ஒவ்வொரு தமிழனும் உற்பத்தியாளனாக மாற வேண்டும். அதன் மூலம் தனி நபர் பொருளாதாரம் வளம் பெறும். இதனால் இனம் வறுமை நிலையில் இருந்து மீட்கப்படும்.இன்று நாம் அரச வேலை வாய்ப்பை எதிர்பார்த்தே, அதன் மீது அக்கறை கொண்டே நிற்கிறோம்.

இதனால் மத்திய அரசின் அடிவருடிகளாக எம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு எம்மை அறியாமலே நாம் தள்ளப்படுகிறோம். இதேபோல அரசமைப்பு ஒவ்வொன்றும் அதிகார அடிப்படையில் மத்திய அமைச்சின் கைகளுக்குள்ளேயே முற்றுமுழுதாக அடக்கப்பட்டு விடுகின்றன. இதனால் கட்டிடங்களை மட்டுமே எமது பிரதேசத்தில் அபிவிருத்தியாக மக்கள் பார்க்கின்றனர்.

எமது விவசாய நிலங்கள் பயிர்ச்செய்கைக்கு பதிலாக கட்டிடங்களாக உருமாற்றப்படுகின்றன. இதனால் நிலம் மாசடைந்து, சூழல் மாசடைவதுடன், எமது அடிப்படை, எதிர்காலம் என்பவை சிதைக்கப்பட்டுச் சின்னாபின்னமாக்கப்பட்டுச் சிந்தனை இல்லாததொரு இனமாக, ஆரோக்கிய மற்றதொரு இனமாக, ஈழத் தமிழினத்தை மாற்றி விடுவதற்கு இன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் திட்டமிட்டுச் செயற்படுகின்றனர்.

இனப்பிரச்சினை ஆரம்பித்த காலத்தில் இருந்த பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களால் அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் பிரயோகிக்கப்பட்ட போதும், எதற்கும் தமிழன் அஞ்சவில்லை.

பொருளாதார தடையையும் பிரயோகித்து, அதிலும் அத்தியாவசிய உணவுப் பொருள்களை வடக்கு, கிழக்குக்கு அனுப்பாது பஞ்சத்தை ஏற்படுத்தி, ஈழத்தமிழினத்தை அடிபணிய வைக்கலாம் என எண்ணிய போதிலும், அதையும் மீறி வாழ்ந்து காட்டிய இனம் தமிழினம்.

ஏனெனில், விவசாயத்தின் மூலம் தமக்குத் தேவையான ஆரோக்கியமான உணவுவகைகளை உற்பத்தி செய்து, அவற்றின் மூலம் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ததுடன் மிகுதியை சந்தைப்படுத்தியும் வந்தனர் எம்மவர்கள்.

இதனால் மண்ணை மட்டும் நம்பி வாழ்ந்ததுடன், இரசாயனப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதும், உள்ளூர் உற்பத்தியான மாட்டெரு, ஆட்டெரு, கூட்டெரு என்பவற்றைப் பயன்படுத்தித் தமது விவசாய முயற்சிகளில் அமோக விளைச்சலை பெற்றுப் பயனடைந்தனர் அவர்கள்.

இதனால் தொற்றாநோய்களுக்கு உட்படாது, அவர்களது ஆயுள்காலம் பலமாக, எமது சூழல் கூறுகளான நிலம், நீர், வளி, ஒளி என்பவை மாசடையாது எம்மவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஆனால் இன்று, எமது அடிப்படைக் கூறுகளான நிலம், நீர், வளி, ஒலி என்பவை பல்வேறுபட்ட காரணங்களினால் மாசாக்கப்பட்டுள்ளன.

இந்த மாசடைதலுக்கு சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் காரணமாக அமைகின்றனர். எமது இனத்தின் எதிர்காலம் பாதிப்படையப் போவதைப் பற்றிச் சிந்திக்காது அவர்கள் செயற்படுகின்றார்கள்.

போர்ச் சூழலில் கூட சமத்துவமாக வாழ்ந்த மக்கள், இன்றைய சமாதானப் பின்னணி யில் சமத்துவம் அற்ற அடித்தள மக்களாக உருவாக்கம் பெற்று வருகின்றனர். சாதியம் சத்தம் இன்றி தலைதூக்கத் தொடங்குகின்றது. இதனால், தேசியத்துக்குள் கட்டுண்டு இருந்த எம்மவர்கள் பிளவுபட்டு வருகின்றனர்.

சுயபொருளாதார நிலை தள்ளாடத் தொடங்கிவிட்டது. சுயதொழில் சுய நலமாகி விட்டது. உள்ளூர் உற்பத்தி உருக்குலைந்து விட்டது. இறக்குமதி தமிழரின் இறைமையாகி விட்டது. ஏற்றுமதி ஏணி வைத்தாலும் எட்டாத நிலையில் தென்னிலங்கையை நம்பி வாழும் வாழ்க்கை முறைக்குள் அமிழ்ந்து வருகின்றோம்.

இத்தகைய, காலகட்டத்தில், ஈழத் தமிழினம் தன்னை எப்படி மாற்றியமைக்கப் போகின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தாலும், அதனை நெறிப்படுத்தி செயற்படுத்துவதற்கு அரசமைப்பு இடம் கொடுக்கவில்லை என்ற கருத்து நிலவி வருகின்றது.

இருப்பினும், அதனைத் தாண்டி புதிய வியூகங்களை அமைத்து, புலம் பெயர் தமிழர்களின் உதவியைப் பெற்று, சுய பொருளாதார நிலையை உருவாக்க நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

- Uthayan