சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவியை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின் போது சாகல ரத்நாயக்கவிடம் இருந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பு மீள பெற்றுக்கொள்ளப்பட்டது.
குறித்த அமைச்சு பதவி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டது. எனினும் குறித்த அமைச்சு பதவி சரத் பொன்சேகாவுக்கு வழங்குவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கு அரசாங்கத்தில் இருப்பவர்களும், பொலிஸ் துறையில் உயர்மட்டத்தில் இருப்பவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், லக்ஸ்மன் கிரியெல்லவைத் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவியை பொறுப்பேற்கத் தயாரா என்று கேட்டுள்ளார்.
அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல ஒரு சட்டத்தரணி. நாடாளுமன்றத்தில் அவைத் தலைவராகவும் இருக்கிறார். எனவே அவருக்கு இந்தப் பதவி பொருத்தமாக இருக்கும் என்றும் ஐ.தே.க தலைமை கருதுகிறது.
எனினும், இந்தத் திட்டத்துக்கு லக்ஸ்மன் கிரியெல்ல இன்னமும் பதிலளிக்கவில்லை என அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.