தமிழர்களின் காணிகளை அவர்கள் முன்பாகவே அபகரிப்பது வேதனையான விடயம்

Report Print Kumar in அரசியல்
136Shares

தமிழ் மக்களின் காணிகளை அவர்கள் முன்பாகவே அபகரிப்பதானது வேதனையான விடயமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாரினால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டப்பள்ளம் ஆலய தலைவர் உட்பட 21 பேரை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் பார்வையிட்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து சிறைச்சாலைக்கு முன்பாக ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பூர்வீக குடியிருப்பு காணிகள், வாழ்வாதார காணிகள், மயானக்காணிகள், மைதானக்காணிகள் அபரிக்கப்படுகின்ற மற்றும் சூறையாடப்படுகின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலில் அம்பாறை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் என்னும் தமிழர்களின் பூர்வீக கிராமத்தில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீகமான மயானக்காணி அபகரிக்கப்பட்டுள்ளது.

அட்டப்பள்ளத்தில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இது தமிழ் மக்களை உள்ளடக்கிய பூர்வீக கிராமமாகும். பரம்பரைபரம்பரையாக மயானபூமியாக பயன்படுத்தி வந்த 14 ஏக்கர் காணியை 2017ஆம் ஆண்டு சகோதர இனத்தை சேர்ந்த ஒருவர் அதற்குரிய ஆவணத்தை கொண்டு வந்து வேலி அடைத்துள்ளார்.

அந்தவேளையில் 12 ஏக்கர் காணியை தமிழ் மக்கள் விட்டுக்கொடுத்துள்ளனர். இரண்டு ஏக்கர் காணியை விட்டு ஏனையவற்றை அடைத்துள்ளார்.

அந்த காணியிலேயே தமது இறந்த உறவுகளின் உடல்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆனால் இன்று அதேநபர் மீண்டும் மிகுதியாகவுள்ள இரண்டு ஏக்கருக்கும் வேலியை அமைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்.

தமது உறவுகள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை உள்ளடக்கியதாகவும் கல்லறைக்கு மேலாகவும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை அவர்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பரம்பரையாக மயானபூமியாக பயன்படுத்தப்பட்டுவந்த பகுதியானது ஒரு சில அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடுகளினாலும், ஒத்துழைப்புடனும் ஒரு சில அரசியல் பின்புலத்துடன் அபரிக்கப்படுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட இவ்வாறான பிரச்சினைகளுக்கு நாங்கள் முகம்கொடுத்து வருகின்றோம். தளவாயில் பிரித்தானிய காலத்தில் வழங்கப்பட்ட பாடசாலை மைதானக்காணி கூட இரவோடு இரவாக வேலியடைக்கப்பட்ட போது நான் அங்கு சென்று அதனை தடுத்து நிறுத்தி அந்த மைதானக்காணியை பெற்றுக்கொடுத்தேன்.

ஆரம்பகாலத்திலிருந்து வரும் மயானக்காணிகள் நில அளவை செய்யப்படாத காரணத்தினால் சில இடங்களில் பிரதேசசபைகளில் பதிவுசெய்யப்படாத நிலையிருக்கின்றது.

அதனை சாதகமாக வைத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் ஒரு சில அதிகாரிகள் தங்களது தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை பட்டாபோட்டுக்கொடுக்கும் கேவலமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது.

அந்தவகையில் அட்டப்பள்ளத்தில் தமது மயானக்காணியை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்த மக்களை சம்மாந்துறை பொலிஸார் பொலிஸ் நிலையம் வாருங்கள் உங்களை சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுடன் சமாதானப்படுத்த போகின்றோம் என்று கூறி அழைத்துள்ளனர்.

அங்கு 21 ஆண்களும், இரண்டு பெண்களும் சென்றவேளையில் அவர்களை அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நான்கு மணி வரையில் வைத்திருந்து பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆலய தலைவர் உட்பட 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் சட்டத்தினை மதிக்கின்றோம். ஆனால் பரம்பரையாக பயன்படுத்தப்பட்டு வந்த மயானக்காணியை அபகரிக்க முற்பட்டவர்களை சரியான முறையில் விசாரணை செய்து அதற்குரிய நடவடிக்கையினை எடுக்காமல் இனவாத கண்ணோட்டத்துடனும் இனவாத சிந்தனையுடனும் செயற்பட்டுள்ள அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழ் மக்களின் காணிக்களை அவர்கள் முன்பாகவே அபகரிப்பதானது வேதனையான விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.