அம்பாறை கலவரம்! உலங்குவானூர்தியில் பிரதமருடன் அம்பாறை சென்ற முக்கியஸ்தர்கள்

Report Print Kumar in அரசியல்
583Shares

அம்பாறை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் குறைப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்திசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொறுப்பை சட்டமா அதிபரிடமும் பொலிஸ்மா அதிபரிடமும் ஒப்படைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் உலங்குவானூர்தியில் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அங்கு ஒலுவில் சுற்றுலா விடுதில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில்,

நல்லாட்சியில் இப்படியானதொரு சம்பவம் நடந்திருக்கூடாது. இந்த சம்பவத்தால் நான் மிகவும் கவலையடைகிறேன். அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு இந்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தார்.

நான் சிங்கப்பூரில் இருக்கும் போதும் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்பு கொண்டு இதுபற்றி கலந்துரையாடினேன்.

சாட்சியங்கள் அழிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசாரணையை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட குழுவே இனி கையாளும்.

இதுதவிர, அம்பாறை பள்ளிவாசல் பாதுகாப்பு வழங்க அங்கு பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடரப்பட்டது.

வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதற்கு பயமில்லாமல், சாட்சிசொல்ல முன்வர வேண்டும். சாட்சி சொல்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்‌கை எடுத்துள்ளோம்.

அத்துடன் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாக்குதலில் ஈடுபட்ட சகலரும் புதிய விசாரணை மூலம் விரைவில் கைது செய்யப்பட்டு, அவருக்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

அம்பாறையில் தோன்றியிருக்கும் பதற்ற நிலையானது, பிரதமரின் வருகையினால் இன்னும் அதிகரித்துவிடும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து இன்னும் குளிர்காய நினைக்கின்ற இனவாத சக்திகளுக்கு மத்தியில், நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பிரதமர் எடுத்திருக்கும் முயற்சிக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.

தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பித்துக் கொள்வதற்கு பல வகைகளிலும் முயற்சித்து வருகின்றனர்.

தாக்குதல் நடைபெற்ற இடங்களிலுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை களவாடிச் சென்றுள்ளனர். எனவே, அயலிலுள்ள சி.சி.டி.வி. பதிவுகளை பரிசோதித்து தாக்குதலில் ஈடுபட்டோரை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,

இந்த தாக்குதல் சம்பவத்தினால் அம்பாறை மாவட்டத்துக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களும் பீதியில் உள்ளர். முஸ்லிம்களுக்கு இவ்வானதொரு கசப்பான சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது. தாக்குதலில் ஈடுபட்ட இனவாதக் கும்பலை கைதுசெய்து முஸ்லிம்கள் நல்லாட்சியில் நம்பிக்கையை காப்பாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

கலந்துரையாடல் முடிவடைந்த பின், அம்பாறையில் தாக்குதலுக்குள்ளான இடங்களுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மெளலானா, மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் நேரடி விஜயம் மேற்கொண்டனர்.

பிரதமரின் வேண்டுகோளின் பேரில், அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் பள்ளிவாசல் வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு அரண் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை செய்தார். இதன்மூலம் பள்ளிவாசலுக்கு வருகின்ற மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

இருப்பினும் பள்ளிவாசல் நிர்வாகத்தை உள்ளடக்கிய வகையில் நாங்கள் நம்பிக்கை நிதியம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அம்பாறையில் தெரிவித்தார்.

இந்த நிதியத்துக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 10 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது. பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை அவசரமாக புனரமைத்து இயல்புநிலைக்கு திரும்புவதற்காக நீங்களும் இந்த நிதியத்துக்கு பங்களிப்புச் செய்யமுடியும்.

உதவ விரும்புகின்ற தனவந்தர்கள் அம்பாறை பள்ளிவாசல் தலைவர் ஹாரூன் உடன் தொடர்புகொள்ள முடியும் என ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.