அம்பாறை தாக்குதல் நல்லாட்சியில் நடந்திருக்கக் கூடாது. இச்சம்பவத்தையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டதையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த அழைப்பையேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (04) அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஹெலிகொப்டரில் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அங்கு ஒலுவில் சுற்றுலா விடுதில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சியில் இப்படியானதொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இச்சம்பவத்தையிட்டு நான் மிகவும் கவலையடைகிறேன். அமைச்சர் ரவூப் ஹக்கீம் என்னை அடிக்கடி தொடர்புகொண்டு இச்சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தார்.
நான் சிங்கப்பூரில் இருக்கும்போதும் தொலைபேசி மூலம் அவருடன் தொடர்புகொண்டு இதுபற்றி கலந்துரையாடினேன். சாட்சியங்கள் அழிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விசாரணையை மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட குழுவே இனி கையாளும் எனத் தெரிவித்த பிரதமர், அம்பறை பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்க அங்கு பாதுகாப்பு அரண் ஒன்றை அமைக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்வதற்கு, பயமில்லாமல் சாட்சி சொல்ல முன்வரவேண்டும். சாட்சி சொல்பவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் வெளியிலிருந்து வருபவர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தாக்குதலில் ஈடுபட்ட சகலரும் புதிய விசாரணை மூலம் விரைவில் கைதுசெய்யப்பட்டு, அவருக்கு உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மெளலானா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.