ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்துள்ள தேரர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வர பெரிய பங்களிப்பை வழங்கிய தம்பர அமில தேரர், ஜனாதிபதியை கடுமையாக சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற சிவில் அமைப்புகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கண்டி தெல்தெனிய, திகன பகுதிகளில் நடந்த சம்பவங்களுக்கு ஜனாதிபதியே முற்றாக பொறுப்புக் கூறவேண்டும்.

நாட்டின் தற்போதுள்ள ஜனாதிபதி வெறுமனே இரண்டு ரூபா 50 காசு பெறுமதி போன்றவர். மிகவும் கவலைக்குரிய நிலைமையே காணப்படுகிறது.

உலகில் எங்கும் இப்படியான ஜனாதிபதியை நாங்கள் கண்டதில்லை. முதுகெலும்பில்லாத ஜனாதிபதி.

உண்மையில் கூறுவதாயின் நாட்டின் சட்டத்தை சரியாக முன்னெடுத்துச் செல்லும் பிரதான பொறுப்பு ஜனாதிபதிக்குரியது.

அதனை அவரால் செய்ய முடியாது என்றால், பதவியில் இருந்து விலகி விட வேண்டும். செய்தால் சரியாக செய், இல்லையென்றால் அப்பால் போய்விடு. ஜனாதிபதி முழு நாட்டையும் அழிக்கின்றார்.

முழு நாட்டுக்கும் பிணியாக மாறியுள்ளார். முழு நாட்டையும் சீரழித்துள்ளார். தேசிய ஐக்கியம் இல்லாத நிலைமைக்கு நாட்டை கொண்டு சென்றுள்ளார்.

அங்கும் சாய்கிறார், இங்கும் சாய்கிறார். கதைப்பதில் மிகவும் திறமையானவர். எனினும் நடவடிக்கை எடுக்க முடியாத முதுகெலும்பில்லாத ஆட்சியாளர்.

நாங்கள் ஆட்சியில் அமர்த்தி செய்யுமாறு கூறிய விடயங்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் செய்துள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு முழு ஐக்கிய தேசியக் கட்சியும் கூறியிருந்தும் அதனை செய்யவில்லை.

காரணம் ஜனாதிபதி திருடர்கள், கொலையாளிகளுடன் இருக்கின்றார். ஜனாதிபதி ஒரு திருடன் கொலைக்காரன் என நாங்கள் நேரடியாக கூறுகிறோம்.

திருடர்களையும், கொலையாளிகளையும் பாதுகாக்கும் ஜனாதிபதியே இன்று ஆட்சியில் இருக்கின்றார். இதனால், ஜனாதிபதி மீது 5 சதத்திற்கும் நம்பிக்கை கொள்ள வேண்டாம் என முழு உலகத்திற்கும் கூறுகிறோம்.

அவர் முற்றாக உடன்பாடுகளுடன் வாழ்கிறார். அவர் அணியும் வெள்ளை ஆடையால் ஒரு சதத்திற்கும் பிரயோசனமில்லை.

மோசடியான ஜனாதிபதி ஆட்சியில் இருக்கின்றார் என்று நாங்கள் அச்சமின்றி கூறுகின்றோம். நாங்கள் சில விசாரணைகளை மேற்கொண்டோம்.

ஜனாதிபதி தொடர்ந்தும் திருடர்களை பாதுகாக்கும் செயற்பாட்டிலேயே இருந்துள்ளமை தெரிவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.