மைத்திரியால் முடியும்: இந்திய ஜனாதிபதி உறுதி

Report Print Shalini in அரசியல்

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி இலங்கைக்கு நீண்டகால நன்மைகளை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடியும் என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கும் இடையில் நேற்று இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போதே இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், சூழலை பாதுகாப்பது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை இந்திய ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

30 வருட காலமாக யுத்தம் இடம்பெற்ற வேளையிலும், அதன் பின்னரும் இலங்கையின் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு ஜனாதிபதி மைத்திரி நன்றிகளை தெரிவித்தார்.

அத்துடன் கடந்த சில நாட்களாக இலங்கையில் சில பிரதேசங்களில் இடம்பெற்ற கலவர சூழ்நிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி இந்திய ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட இந்திய ஜனாதிபதி, மிக விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வதாக தெரிவித்தார்.