கோத்தபாயவின் பகிரங்க அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

நாட்டு மக்களின் நிலைப்பாட்டுக்கு அமைய 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட அழைப்பு கிடைத்தால், அதற்கு தான் தயார் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“அழைப்பு கிடைத்தால், கட்டாயம் ஏற்றுக்கொள்வேன். அதற்காக அமெரிக்க குடிரிமையை இரத்துச் செய்யவும் நடவடிக்கை எடுப்பேன்.

நேரடியாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட போகிறேன் என்று கூறுவதற்கு பதில் நாட்டில் அதற்கான நிலைப்பாடு அதிகரிக்க வேண்டியது சிறந்த முறையாகும்.

அப்படியான நிலையிலேயே வெற்றிகரமான வேட்பாளரை நிறுத்த முடியும்.”

அரசியல் அனுபவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, முழு உலகிலும் சம்பிரதாயமான அரசியல் முறை தற்போது நிராகரிக்கப்பட்டு வருகிறது.

அது அமெரிக்காவில் கூட நடந்துள்ளது. ட்ரம்ப் அனுபவமிக்க அரசியல்வாதி அல்ல. அப்படியானவர்களை மக்கள் தேடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையின வாக்குகளை கவர்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள கோத்தபாய, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியில் இருக்கும் எந்த நபரும் பெறக் கூடிய சிறுபான்மையின வாக்குகள் எனக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.

என்னை பொறுத்தவரை நாட்டின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் மிகவும் தீர்மானகரமான தேர்தல். வேட்பாளராக போட்டியிடும் நபர் கட்டாயம் நாட்டை நேசிப்பவராகவும் நாட்டின் இறையாண்மை, ஐக்கியம், பல வருடகால பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த, வாழ்க்கையை அர்ப்பணித்த படையினரை பாதுகாப்பவராகவும் வேலை செய்யக் கூடியவராகவும் பகை அரசியல் இல்லாத, நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.