ஜெனிவாவில் காத்திருக்கும் கடிவாளம்!

Report Print Subathra in அரசியல்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே கண்டியில் இன வன்முறைகள் தலைவிரித்தாடியுள்ளன.

இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரைச் சமாளிப்பதற்காக அரசாங்கம் அவசர அவசரமாக காணாமல்போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்களை நியமித்தது. காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சர்வதேச பிரகடன சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த இரண்டையும் வைத்துக் கொண்டே இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரைச் சமாளித்து விட எண்ணியிருந்த அரசாங்கத்துக்கு ஜெனிவா அமர்வு கடுமையான அழுத்தற்களைக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

எதிர்வரும் 21ம் திகதி ஐநா மனிதஉரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மொழி அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதற்குப் பின்னர் இலங்கை குறித்த விவாதம் இரண்டு கட்டங்களாக வேவ்வேறு தலைப்புகளின் கீழ் நடக்கவுள்ளது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டு ஆண்டுகள் கால அவகாசத்தைப் பெற்ற பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணி ஒன்று அமைக்கப்பட்டு அதன் அறிக்கை பெறப்பட்டிருந்த போதிலும் அந்தச் செயலணியின் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளக் கூட இல்லை.

கடந்த ஓராண்டில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளையோ ஐநா குறிப்பிடும் நிலைமாறு கால நீதி செயல்முறைகளையோ முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகைளை முன்னெடுக்காமல் அலட்சியமாகவே அரசாங்கம் இருந்தது.

இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் பெற்றுக்கொண்டு விட்டதால் அது பற்றி உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற போக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அப்பட்டமாகவே தெரிந்தது.

தமக்கு சார்பான அரசாங்கத்துக்கு அடிக்கடி ஜெனிவாவில் அழுத்தங்களைக் கொடுத்து தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பதால் தான் கோரப்பட்ட கால அவகாசத்தை விட மேலதிக கால அவகாசத்தை ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் வழங்கும் வகையில் கடந்த ஆண்டு தீர்மானத்தை முன்வைத்திருந்தது அமெரிக்கா.

அரசாங்கத்துக்கு அதிகளவு நெருக்கடியைக் கொடுக்காமல் இருப்பதற்கான நீண்டதொரு கால அவகாசம் கொடுக்கப்பட்டதால் அரசாங்கம் அலட்சியமாகச் செயற்படத் தொடங்கியிருந்தது.

கடந்த ஒருவருட காலத்தில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகளில் எந்தப் பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை. எல்லாமே மிக மெதுவாகவே தான் நடந்து கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டை ஐநா மனிதஉரிமை ஆணையாளர் கடந்த வாரம் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறார்.

அதுபோல பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் அரசாங்கம் போதிய வேகத்தைக் காண்பிக்கவில்லை, அலட்சியமாகவே நடந்து கொள்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அரசாங்கம் விரைவாகவும் வேகமாகவும் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருந்தாலும் அரசியல் நலன்களைக் கருத்தில் கொண்டு காலத்தை இழுத்தடிக்கும் வழக்கமான அரசியல் தந்திரோபாயத்தையே கையாண்டு வருகிறது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகி விட்ட நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூடத் தாக்குப்பிடிக்கப் போவதில்லை.

தற்போதைய பாராளுமன்றத்தின் ஆயுள்காலம் 2020 ஆகஸ்ட வரை இருந்தாலும் 2020 ஜனவரிக்கு முன்னர் நடத்தப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்று எவராலும் எதிர்வு கூற முடியாது.

ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணி வெற்றி பெறுமானால் பாராளுமன்றம் உடனடியாக கலைக்கப்படவோ அல்லது இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்படவோ வாயப்புகள் உள்ளன.

எனவே தற்போதைய அரசாங்கம் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் கொடுத்துள்ள வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கு இன்னமும் எஞ்சியிருப்பது 20 மாதங்கள் தான்.

அதற்குக் காத்திரமானதொரு பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு இந்த அரசாங்கம் எந்த உருப்படியான முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு அடுத்த அரசாங்கத்தின் தலையில் கட்டிவிடப்படக்கூடிய சாத்தியங்களே உள்ளன.

தற்போதைக்கு இப்படியே சமாளித்துக் கொண்டு போனால் சரி, அடுத்த அரசாங்கம் அமைத்த பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்ற அலட்சிய மனோபாவத்தில் அரசாங்கம் இருக்கிறது.

இத்தகையதொரு சூழலைத்தான் ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் 37வது கூட்டத்தொடரை எதிர்கொள்ளத் தயாராகி வந்தது அரசாங்கம்.

கேட்டதற்கும் அதிகமான கால அவகாசத்தை கொடுத்த ஐநா மனித உரிமைகள் பேரவையை இலகுவாகச் சமாளித்து விடலாம் என்றும் அரசாங்கம் கருதியிருந்தது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்க வேண்டிய காணாமற்போனோர் பணியகத்தை இப்போது தான் அரசாங்கம் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. இதனைத் தான் பெரிய சாதனையாக பேரவையில் முன்வைக்கப் போகிறது.

அதுமாத்திரமன்றி காணாமல் போவதில் இருந்து அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான சர்வதேசப் பிரகடன சட்டத்தையும் அவசர அவசரமாக கடந்த வாரம் நிறைவேற்றியிருக்கிறது.

இந்த இரண்டும் மாத்திரமே இந்தமுறை ஜெனிவாவில் தம்மைக் காப்பாற்றும் என்று அரசாங்கம் நம்பியிருந்தது. இந்த இரண்டையும் காண்பித்து அரசாங்கம் இம்முறை ஜெனிவாவைச் சமாளித்து விடும் என்றே பலரும் நம்பியிருந்தனர்.

ஆனால் எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது கண்டியில் நடந்த வன்முறைகள். கண்டியில் வன்முறைகள் ஆரம்பிக்க முன்னரே அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றிருந்தன. அது அவ்வளவாக சர்வதேச கவனத்தை ஈர்க்கவில்லை.

எனினும் கண்டியின் வன்முறைகள் உலகெங்கும் மீண்டும் இலங்கையை பதற்றம் நிறைந்த நாடாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுவரை இலங்கை பற்றி அறியாமல் இருந்தவர்களைக் கூட திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

கண்டியில் நடந்த வன்முறைகள் இன மத சிறுபான்மையினருக்கு எதிராக இலங்கையில் காலங்காலமாக நடந்து வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகும்.

தமிழர்களும் முஸ்லிம்களும் மாறி மாறி வன்முறைகளுக்கு பலிக்கடாவாக்கப்பட்டு வந்துள்ளமை வரலாறு

அரசாங்கத்தின் பொறுப்பின்மை இந்த வன்முறைகளுக்கு முக்கிய காரணம்.

ஐநா மனித உரிமை ஆணையாளர் செய்த் ராட் அல் ஹூசைன் கடந்த வாரம் கருத்து வெளியிட்ட போது குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படாது என்ற துணிச்சல் தான் இது போன்ற வன்முறைகளுக்கு காரணம் என்று ’கூறியிருக்கிறார். இதே கருத்து பல்வேறு மட்டங்களில் இருந்தும் வந்திருக்கிறது.

குற்றவாளிகளுக்கு அரசாங்கமே பாதுகாப்பு அளிக்கின்ற வகையில் செயற்படுகின்ற போக்கின் விளைவு தான் இது. இரா.சம்பந்தன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

குற்றங்களை மறைக்கின்ற அரசாங்கமே தவறுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற போக்கு குற்றமிழைப்பவர்களுக்குச் சாதமாக அமைகின்றது.

போர்க்கால குற்றங்களுக்கு முறையான தண்டனையை இந்த அரசாங்கம் பெற்றுக் கொடுத்திருந்தால் போருக்குப் பிந்திய காலத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுக்கத் துணிந்திருக்க மாட்டார்கள்.

இந்தளவு பெரிய வன்முறைகள் வெடித்திருக்காது. ஏனென்றால் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கான வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. ஆனால் அதனை நிறைவேற்றுவதில் காண்பித்த அலட்சியமும் அக்கறையின்மையும் ஒரு தோல்வியுற்ற அரசாங்கமாக வெளி உலகினால் அடையாளப்படுத்தும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது.

போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு இழுத்தடித்து வந்த அரசாங்கத்துக்கு கண்டி கலவரங்கள் கடிவாளம் போடுகின்ற நிலையை ஏற்படுத்தக் கூடும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையை மேற்குலக ஆதரவுடன் சமாளித்து விடலாம் என்று கருதியிருந்த அரசாங்கத்துக்கு இம்முறை அமர்வு சோதனை மிக்கதாக அமையலாம். அதற்காக பெரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படும் என்று அர்த்தமில்லை.

சர்வதேச சமூகத்தின் கடுமையான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கும் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் காணப்படும் இழுபறிக்கான காரணங்களை விபரிக்க வேண்டியிருக்கும். பல்வேறு நாடுகளின் எச்சரிக்கைகளை செவிமடுக்க வேண்டியிருக்கும்.

அதற்கும் அப்பால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த ராட் அல் ஹூசைன் பொறுப்புக்கூறலுக்கான உலகளாவிய சட்டவரம்புடன் கூடிய நடவடிக்கைக்கு உறுப்பு நாடுகளை ஊக்குவிப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

இது மாற்று நடவடிக்கைகளை எடுக்குமாறு விடுக்கப்படும் அழைப்பு. இதற்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு எந்தளவுக்கு கிடைக்கும் என்று கூற முடியாவிடினும் இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிடும்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஜெனிவாவில் எதிர்கொண்ட நெருக்கடிகளைப் போன்றளவுக்கு இல்லாவிடினும் கிட்டத்தட்ட அதற்கு நெருக்கமான அளவு அழுத்தங்கள் அரசாங்கம் மீது கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே கொடுக்கப்பட்ட கால அவகாசம் இன்னமும் இருக்கும் நிலையில் அது சார்ந்த சிக்கல்களை அரசாங்கம் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இல்லாவிடினும் கண்டியில் வெடித்த கலவரங்களுக்காக சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிக்கத் தவறியதற்காக வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தவறியதற்காக ஜெனிவாவில் கூனிக்குறுகிப் பதிலளிக்கும் நிலை அரசுக்கு ஏற்படும்.

ஆனாலும் அது பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ஊக்குவிக்குமா எ்பதை இப்போதைக்கு கணிக்க முடியாது.