சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்குமாறு சம்பிக்க கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்

சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட வேண்டுமென அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கண்டி மோதல் சம்பவங்கள் அமைதியான முறையில் முடிவடைந்துள்ளதனால் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்.

கண்டியில் வன்முறைகள் சுமூகம் அடையும் வரையில் சமூக ஊடகங்கள் மீது தடை விதிக்கப்பட்டதில் தவறில்லை. எனினும், தொடர்ச்சியாக சமூக ஊடகங்கள் மீது தடை விதிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.

வர்த்தக நடவடிக்கைகள், தொழில் விவகாரங்கள், கல்வி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு வட்ஸ்அப், வைபர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் தேவைப்படுகின்றன.

இவ்வாறான சமூக ஊடகங்களை முடக்கிவிட்டு மீளவும் கற்காலத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.