இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகளால் சிரமம்: சீ.வி.விக்னேஷ்வரன்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

இலங்கை அரசாங்கம் தன்னுடைய அரசியல் நலன்களுக்காக மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் பல அரசியல்வாதிகளை இணை தலைவர்களாக நியமித்தமையினாலேயே தற்போது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களை நடத்துவதில் சிரமங்கள் ஏற்படுவதாக வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

வட மாகாணசபையின் 118ஆவது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க காலப்பகுதியில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஒருவரும் இணைத் தலைவர்களாக இருப்பார்கள்.

அந்த நடைமுறை தொடர்ந்துவந்த நிலையில் இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அது மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இணை தலைவர்களாக வேறு சில அரசியல்வாதிகளும் இணைக்கப்பட்டார்கள்.

நான் ஜனாதிபதியை சந்தித்தபோது சில அரசியல் நலன்களுக்காக இவ்வாறு செய்துள்ளீர்கள். ஆனால் பல்வேறு சிக்கல்களை நாங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.

மேலும் இவ்வாறு பல அரசியல்வாதிகள் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருப்பதால் கூட்டத்தில் பேச வேண்டிய விடயங்களை அவர்கள் இணைத் தலைவர் ஆசனத்திலிருந்து பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனை கூறியதால் எனக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இப்போது மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களுக்கான திகதிகள் ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 34 பிரதேச செயலகங்கள் மற்றும் 5 மாவட்ட செயலகங்கள் என 39 ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு நான் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது.

இவ்வாறான நிலை மாற்றப்படாவிட்டால் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கம் நினைவேறாமல் போகும் என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களால் உருவாகும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளை குற்றம் சொல்லி பயனில்லை. ஜனாதிபதியே பொறுப்பாளியாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.