மகிந்த ராஜபக்சவுக்கே அதிக வாய்ப்பு!

Report Print Samy in அரசியல்

கண்டியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு அரசே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அமைதியை நிலைநாட்டுவதற்கு அரசு செய்ய வேண்டிய வேலைகளைத் தாமே முன்னின்று செயற்படுத்துவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தமக்கும் சில பொறுப்புக்கள் உள்ளன என்று அவர் வௌிக்காட்டிக் கொண்டதாகவே அவரது மேற்குறித்த கருத்து வெளிப்பாடு கருத வைக்கிறது.ஆனால் எல்லாமும் நடந்து முடிந்த பின்னர் அறிக்கை வௌியிடுவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை.

அம்பாறையில் ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் கண்டிக்குப் பரவி பெரும் இடரை ஏற்படுத்தி விட்டது.முஸ்லிம் சமூகத்தினரது பல நூற்றுக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரியூட்டி அழிக்கப்பட்டன. 25க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன. முஸ்லிம் மக்கள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டனர்.

பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுகையில் ஈடுபடுபவதற்குக்கூட, அவர்களால் முடியவில்லை. பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. கண்டியின் எல்லைப் புறங்களே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது தம்மையொரு புனிதராகக் காட்டுவதற்கு முயற்சி செய்கின்ற மகிந்த, கலவரத்துக்கான பழி முழுவதையும் அரசின் மீதே சுமத்துகின்றார்.அவர் தலைமை தாங்குகின்ற கூட்டு எதிரணியினரின் முக்கிய கொள்கையே இனவாதம்தான். இனவாதம் பேசாது விட்டால் இவர்களால் அரசியலில் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள முடியாது.

மகிந்தவுடன் கூட இருப்பவர்களில் பலரும் இனவாதிகளே என்பதையும், நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலையில் கண்டியில் அமைதி ஏற்படுவதற்குத் தாமே காரணமென மகிந்த கூறியுள்ளமை வேடிக்கையானது.

இதேவேளை இடம்பெறவிருக்கும் ஜனாதிபதிக்கான தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை ஈட்டிக் கொள்ளும் பொருட்டே மகிந்த ராஜபக்ச நாடகமாடுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கி றார்.

அமைச்சர் சம்பிக்கவும் ஒரு இனவாதி தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களையே அவர் தொடர்ந்து வௌியிட்டு வருகின்றார்.

பெரும்பான்மையின அரசியல்வாதிகள் தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே சிறுபான்மையினரைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வடக்குக் கிழக்குத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்றனர். இவர்களில் அநேகமானவர்கள் நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டிலும் அங்கம் வகிக்கின்றனர். இந்த நிலையில் இவர்களின் ஆதரவை ஈர்க்க வேண்டிய தேவை பெரும்பான்மையின அரசியல்வாதிகளுக்கு உள்ளது.

பெரும்பான்மையின இனவாதிகள், சிறுபான்மையினரான தமிழர்களும், சிங்களவர்களும் ஐக்கியமாக வாழ்வதை ஒருபோதுமே விரும்பியதில்லை. அவர்களின் சூழ்ச்சி காரணமாகவே தமிழர்களின் போராட்டங்களிலிருந்து முஸ்லிம் மக்கள் விலகி நின்றனர்.

போரின்போது முஸ்லிம் மக்கள் வேவு பார்க்கின்ற கடமையில் வெற்றிகரமாக ஈடுபட்டு சிங்களவர்கள் போரில் வெற்றி பெறுவதற்கு உதவியதாகக் கூட்டுப்படைகளின் பிரதானி கூறியிருப்பதானது தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கான ஒரு திட்டமே என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் இந்த இரண்டு இனத்தவர்களையும் பிரித்து விடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த இரண்டு இனங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்ற கல்முனையில் இந்துக்களுக்கெதிரான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோத விடுவதன் மூலமாக ஏதோவொரு தீயசக்தி இலாபமடைய முயற்சிப்பது இதிலிருந்து தெரிகின்றது.

ஆகவே தமிழ், முஸ்லிம் மக்கள் விழிப்புடன் இருந்து இதை முறியடிக்க வேண்டும்.இவர்கள் விழிப்புடனும், உறுதியாகவும் இருந்தால் எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க முடியும்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள் சிலவற்றில் பௌத்த துறவிகள் சிலர் பாதுகாப்புக்காக நின்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில பௌத்த துறவிகளே முன்னின்று கலவரங்களைத் தூண்டியதாகச் செய்திகள் வௌிவந்துள்ள நிலையில், வேறொரு சாரார் இவ்வாறு நடந்துள்ளனர்.

ஆகவே கலவரங்களுக்கான உண்மைகள் கண்டறியப்பட்டு, அதில் சம்பந்தமான இறுக்கமான நடவடிக்கை எடுப்பது அரசின் பிரதான கடமையாகும்.

அதுவரைக்கும் ஒருவரையொருவர் மாறிமாறிக் குற்றம் சாட்டுகின்ற செயற்பாடுகள் தொடரத்தான் செய்யும்.

அரசு தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளுமானால், நாட்டில் மீண்டும் மீண்டும் கலவரங்கள் இடம்பெறுவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

அதுமட்டுமல்லாது அது மகிந்த தரப்புக்கு வாய்ப்பாகவும் அமைந்து விடும்.

- Uthayan