இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மூலோபாயம்!

Report Print Subathra in அரசியல்

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட பின்னர் பிரதியமைச்சர் ஒருவர் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார். முஸ்லிம் இளைஞர்கள் அதிகளவில் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.

இரண்டாவது கட்ட ஈழப்போர்க் காலத்தில் கிழக்கில் முஸ்லிம்களை ஊர்காவல் படையில் சேர்க்கும் நடவடிக்கை மும்முரமாகவிருந்தது. ஆரம்ப காலத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் விடுதலைப் புலிகளுக்குஎதிரான போருக்காகவும் பயன்படுத்தப்பட்டிருந்தனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து செய்தியாளர் மாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட கூட்டுப் படைகளின் தளபதியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன முஸ்லிம்களின் புலனாய்வுத் தகவல்களால் தான் புலிகளுடனான போரில் வெற்றி பெற முடிந்தது என்றும் இராணுவத்தில் இருந்த முஸ்லிம் அதிகாரிகள் புலனாய்வு நடவடிக்கைகளில் மிகப் பெரிய பங்களிப்பை ஆற்றியிருந்தனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு முஸ்லிம்களை அரசாங்கமும் இராணுவமும் நன்றாகவே பயன்படுத்திக் கொண்டன. அதற்கு முஸ்லிம்களும் துணைபோயிருந்தார்கள். என்ற குற்றச்சாட்டு புதியதல்ல.

இப்போது முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை வருகின்ற போது இராணுவத்தில் முஸ்லிம்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.

முன்னரைப் போல இப்போது முஸ்லிம் ஊர்காவல் படையை உருவாக்க முடியாது. எனவே தான் இராணுவத்தில் அதிகளவில் முஸ்லிம்களைச் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார் அவர்.

இலங்கை இராணுவத்தில் அதிகளவில் முஸ்லிம்களைச் சேர்த்துக் கொள்வதால் மாத்திரம் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புக் கிடைத்து விடுமா? இதுதான் இப்போதுள்ள கேள்வி.

இலங்கை இராணுவத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிங்கள இனத்தவர்கள் தான். அதற்கடுத்து முஸ்லிம்களும் மிகச்சொற்ப அளவில் தமிழர்களும் இருக்கின்றனர்.

இலங்கையின் மொத்த சனத்தொகை விகிதாசாரத்தின்படி பார்த்தால் சுமார் 75 வீதம் தான் சிங்களவர்கள். அந்தவகையில் இராணுவத்தின் மொத்த ஆளணியில் முக்கால் பங்கினர் தான் சிங்களவர்கள் இருக்க வேண்டும்.

ஆனால் இராணுவத்தில் 95 வீத்த்துக்கும் அதிகளவானோர் சிங்களவர்களாகவே இருக்கின்றனர். இனவிகிதாசாரத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கோ தமிழர்களுக்கோ இடமளிக்கப்படாததால் தான் இன்னமும் சிங்கள இராணுவம் என்று கூறப்படுகின்ற நிலை காணப்படுகிறது.

இலங்கைக்காக முன்மொழியப்பட்ட நல்லிணக்க செயற்திட்டங்களில் இராணுவத்தில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை இராணுவத்தில் தமிழ் ரெஜிமென்ட் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அரச தரப்பில் உள்ள சிலர் கூறியிருந்தனர். ஆனால் அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகள் எதையும் முன்னெடுக்கவில்லை.

முஸ்லிம்களை இன விகிதாசாரப்படியோ அல்லது அதற்கு அதிகமாகவோ இராணுவத்தில் சேர்த்துக் கொண்டாலும் கூட கண்டியில் இடம்பெற்றது போன்ற வன்முறைகளைத் தடுக்க முடியாது.

இராணுவத்துக்குள் இருக்கப் போகின்ற சிறுபான்மையினரால் இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாது. இராணுவம் என்பது ஓர் ஒழுங்கு முறைப்படி கட்டமைக்கப்பட்டது. அது மேலிருந்து கீழாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டளைகளுக்கு அடிபணியும் ஒரு கட்டமைப்பு.

பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற போது இராணுவத்தில் பெரும்பாலும் தமிழர்களும் பறங்கியர்களும் தான் கட்டளையிடும் அதிகாரிகள் நிலையில் இருந்தனர். ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்த நிலை மாற்றியமைக்கப்பட்டு சிங்கள பௌத்த இராணுவமாக அது கட்டமைக்கப்பட்டது. இது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட மாற்றம்.

இப்போது தமிழர்களையும் முஸ்லிம்களையும் இராணுவத்துக்குள் உள்வாங்கினாலும் கூட அது அந்தந்த இனங்களின் பாதுகாப்புக்கு உதவக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் மேல்நிலை அதிகாரம் யாரிடம் இருக்கின்றதோ அவர்கள் தான் இராணுவத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக இருப்பார்கள்.

கட்டளையிடும் அதிகாரிகள் நிலையில் சிறுபான்மையினருக்கு இடமளிக்கப்படாத நிலையில் பெரும்பான்மையின அதிகாரிகளின் ஆணைகள் தான் இராணுவத்தைக் கட்டுப்படுத்தும்.

இனிமேல் தமிழர்களையோ முஸ்லிம்களையோ இராணுவத்தில் அதிகாரிகளாக சேர்த்துக் கொண்டாலும் அவர்கள் கட்டளையிடும் நிலைக்குப் பதவி உயர்வுகளைப் பெறுவதற்கு இரண்டு மூன்று தசாப்தங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். இது ஒரு முக்கியமான விடயம்.

தமிழர்களையோ முஸ்லிம்களையோ இராணுவத்தில் சேர்க்கின்ற விடயத்தில் அரசாங்கம் மிகவும் கவனமாகவே நடந்து கொள்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தில் தமிழர்களை ஆங்காங்கே சேர்க்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட 50 பேரை இராணுவத்தில் சேர்த்திருப்பதாகக் கூறப்பட்டது.

அவ்வாறு சேர்க்கப்பட்டவர்கள் எவருமே இராணுவத்தில் நிரந்தரப் படைப்பிரிவுகளுக்கு உள்வாங்கப்படவில்லை. அனைவரும் தொண்டர் படையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை, பலாலியில் உருவாக்கப்படும் தென்னந் தோட்டங்களில் கூலியாட்களாக இருப்பது தான்.

ஒரு பக்கத்தில் இராணுவத்தில் தமிழர்களுக்கும் இடமளிக்கப்படுவதாக பிரசாரம் செய்யப்பட்டாலும் அவர்கள் கட்டளையிடும் அதிகாரம் கொண்ட அதிகாரிகள் நிலையை நோக்கி முன்னேற முடியாத வகையில் தான் அமுக்கி வைக்கப்படுகின்றனர்.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தை அரசாங்கம் வன்னியில் மிக நேர்த்தியாகத் திட்டமிட்ட ஒரு பொறிமுறைக்குள் கொண்டு வந்திருக்கிறது. அது தமிழ்ச் சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சிவில் பாதுகாப்புப் படையில் முன்னாள் போராளிகள் சேர்க்கப்பட்டு பண்ணை வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபா வரை ஊதியம் வழங்கப்படுகிறது. வாழ்வாதார வசதிகள் ஏதும் இல்லாதிருந்த இவர்களுக்கு மாத ஊதியம் பெறும் வசதி கிடைத்திருப்பதை குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனாலும் இவர்கள் என்ன தேவைக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயம்.

சில மாதங்களுக்கு முன்னர் தம்மையும் சிவில் பாதுகாப்புப் படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் போராளிகள் போராட்டம் ஒன்றை கிளிநொச்சியில் நடத்தியிருந்தனர். அதுபோலவே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கட்டளை அதிகாரியை இடமாற்றம் செய்யக் கூடாது என்று வடக்கு மாகாண ஆளுநரிடம் போய் மனுக் கொடுக்கின்ற அளவுக்கு போராளிகளின் நிலை மாற்றப்பட்டிருக்கிறது.

வடக்கில் இருந்து படைகளை வெளியேற்ற வேண்டும் என்று தமிழ் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்துகின்றவர்களாக சிவில் பாதுகாப்புப் படையில் உள்ள முன்னாள் போராளிகள் மாற்றப்பட்டுள்ளார்கள்.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் மீது பல்வேறு விதமான ஆக்கிரமிப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. தமிழர்களின் நிலங்களை நேரடியாக ஆக்கிரமிப்பது அதில் ஒரு முறை. தமிழர்களின் வாழ்வியல் சூழலை ஆக்கிரமிப்பது இன்னொரு முறை. அது தான் சிவில் பாதுகாப்புப் படை மூலம் முன்னெடுக்கப்படுகிறது.

முன்பள்ளிகள் இப்போது சிவில் பாதுகாப்புப் படைகளால் நடத்தப்படுகின்றன. அங்கு கற்பித்தல் என்பது இராணுவ ஒழுங்கின் கீழேயே முன்னெடுக்கப்படுகிறது. முன்பள்ளி ஆசிரியர்கள் சிவில் தொண்டர் படைக்குள் உள்வாங்கப்பட்டு 30 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கப்படுகிறது.

இப்போது வடக்கு மாகாண சபை இந்த முன்பள்ளிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முனைகிறது. ஆனால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்களால் 30 ஆயிரம் ரூபா ஊதியம் கொடுக்க முடியாது.

தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்துக்கு இணையான ஊதியத்தை இவர்களுக்கு வழங்க முற்பட்டால் அவர்கள் மாகாணசபைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவார்கள். அது அதிகாரப்பகிர்வை கேள்விக்குள்ளாக்கும்.

இவ்வாறாக தமிழ்ச் சமூகத்துக்குள் பல்வேறு வடிவங்களில் இராணுவ ஆக்கிரமிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தமிழர் தரப்பு ஒருங்கிணைய முடியாத ஒரு கட்டமைப்பை அரசாங்கமும் இராணுவமும் மிக நுட்பமான முறையில் உருவாக்கி வைத்திருக்கின்றன.

இந்த ஒழுங்கமைப்புத் தான் நிரந்தரமாக சிறுபான்மையினங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக கையாளப்படுகின்ற சூத்திரம். இதனை போருக்குப் பின்னர் இராணுவம் நன்கு கையாளுகிறது.

சிறுபான்மையினரான தமிழர்களோ முஸ்லிம்களோ இதனை அவ்வளவாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

அதனால் தான் இன்னமும் அவர்கள் இராணுவத்தில் கூடுதலாக தமது இனத்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.