ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை உடன் பதவி நீக்க வேண்டும்

Report Print Rusath in அரசியல்
89Shares

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பலம் பொருந்திய பல கட்சிகளை எதிர்த்து நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டிருந்தோம் என அக்கட்சியின் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எருவில் கிராமத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அப்பகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.

இங்கு அவர்கள் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

தேர்தல் காலத்தில் எமது கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் தவஞானசூரியம் மற்றும் மாவட்ட அமைப்பாளர் த.கெங்காதரன் ஆகியோர் எமக்கு எந்த வித உதவிகளையும் மேற்கொள்ளவில்லை. எமக்காக பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அவர்களில் யாரும் ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை.

அது ஒருபுறமிருக்க மேற்படி உள்ளூராட்சி மன்றங்களுக்கு விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களை வழங்கும் தெரிவில் களத்தில் நின்ற வேட்பாளர்களாகிய எங்களிடம் கலந்தாலோசிக்காமல் அவர்களின் தனிப்பட்ட விருப்பின்பேரில் நபர்களைத் தெரிவு செய்துள்ளார்கள்.

எனவே, இலங்கையிலுள்ள பலம் பொருந்திய தேசிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சியை பட்டிருப்புத் தொகுதியில் இல்லாமல் செய்வதற்கு மறைமுகமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது தொகுதி அமைப்பாளர் தவஞானசூரியம், மற்றும் மாவட்ட அமைப்பாளர் த.கெங்காதரன் ஆகியோரை எமது கட்சியின் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் தலையிட்டு, அவர்களை அப்பதவிகளிலிருந்து நீக்கிவிட்டு திறமையானவர்களை கண்டு அப்பகுதி மக்களுக்கு சேவை செய்யும் வகையில் நியமனங்களை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.