கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்

Report Print Nesan Nesan in அரசியல்
12Shares

கல்முனை மாநகர சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு சபை நடவடிக்கைகள் மற்றும் தமது பொறுப்புகள், செயற்பாடுகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்படும் என மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஹெலிகொப்டர் சின்னத்தில் சுயேச்சைக்குழு வேட்பாளராக போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனை எம்.எஸ்.எம்.ஹாரிஸ் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று மாநகர சபை செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

புதிய கலப்பு முறையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு போட்டியிட்ட சுயேட்சைக்குழுக்களில் சாய்ந்தமருது தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழுவும் மருதமுனை ஹெலிகொப்டர் சின்ன சுயேட்சைக்குழுவுமே நேரடியாக வட்டாரங்களில் வெற்றியீட்டியுள்ளன.

இதுவரை 19 உறுப்பினர்களைக் கொண்டிருந்த எமது மாநகர சபையினரின் எண்ணிக்கை தற்போது 41 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தெரிவு செய்யப்பட்டிருப்போரில் பெரும்பாலானோர் புதிய உறுப்பினர்களாவர். அதனால் சபை நடவடிக்கைகள் தொடர்பிலும் தமது பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர்களுக்கு போதிய பயிற்சிகள் வழங்கப்படும்.

இதற்காக எமது மாநகர சபை மட்டத்திலும் மாகாண சபை மட்டத்திலும் கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.

சபா மண்டபத்தில் இட நெருக்கடி ஏற்பட்டிருப்பதனால் மாநகர சபை வளாகத்தில் தொலைகாட்சி திரைகள் மூலம் சபை அமர்வினை பொது மக்கள் பார்வையிட ஒழுங்குகள் செய்யப்படும்.

எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் இடம்பெறவுள்ள அங்குரார்ப்பண அமர்வின்போது எமது மாநகர சபைக்கான புதிய மேயர், பிரதி மேயர் ஆகியோர் உறுப்பினர்களிடையே நடத்தப்படும் இரகசிய அல்லது பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள் குறிப்பிட்டுள்ளார்.