கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள த.தே.கூட்டமைப்பு

Report Print Ashik in அரசியல்

இம்முறை நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சற்று பின்னடைவை சந்தித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை ஏமாற்றுகின்றதாக கூறி தேர்தல் பிரச்சாரங்களை செய்து விடுதலைப் புலிகள் போராளி கட்சி என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள் கடைசி நேரத்தில் ஆளும் கட்சிப் பக்கம் தலைசாய்த்தது கவலைக்குரிய விடயம்.

முடிந்ததை கதைத்து பயனில்லை. இனியாவது தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இருக்கின்ற வீடு, சைக்கிள், சூரியன், ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயலாற்ற வேண்டும். அத்தோடு அடுத்த தடவை அனைத்து சபைகளையும் கைப்பற்ற வேண்டும்.

இம்முறை வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களிடமும் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இனம், மதம், மொழி வேறுபாடுகள் இன்றி அனைவரினதும் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ஒவ்வொருவரினதும் சேவை அமைய வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.