பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா நகரசபைக்கு புதிய முதல்வர் தெரிவு

Report Print Shalini in அரசியல்

பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

வவுனியா நகரசபைக்கான தலைவர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

இதன்போது பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பட்டு, கூட்டமைப்பின் சார்பாக போட்டியிட்ட நாகலிங்கம் சேனாதிராசாவுக்கு ஆதரவாக கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கியதேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமனுக்கு ஆதரவாக தமிழர்விடுதலைக் கூட்டணி 3 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 3வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சி 3 வாக்குகளும், ஈ.பி.டி.பி ஒருவாக்கும் பொது ஜன பெரமுனவின் ஒருவாக்குமாக மொத்தம் 11 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனடிப்படையில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த கௌதமன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, வவுனியா நகரசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட இ.கௌதமன், நகரசபையின் முன்னாள் தலைவரான வேலுச் சேமன் எனப்படும் ச.சுப்பிரமணியத்தின் பெறாமகனாவார்.

இத் தெரிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், கே.கே.மஸ்தான், சிவமோகன், வடமாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஜ.ரி.லிங்கநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா நகரசபையைக் கைப்பற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

எனினும் எவரும் எதிர்பார்க்காத வகையில் 3 வாக்குகள் வித்தியாசத்தில் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி, ஈ.பி.டீ.பி. ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழர் விடுதலை கூட்டணி வவுனாயா நகரசபையை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌதமன் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவராவார். மக்களால் நிராகரிக்கப்பட்ட இவர் விகிதாசார முறையில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி மட்டக்களப்பு - ஆரையம்பதி மற்றும் கோரளைப்பற்று ஆகிய சபைகளுக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் விகிதாசார முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் மற்றும் புகைப்படங்கள் - சதீஸ்