வவுனியா வடக்கு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Report Print Thileepan Thileepan in அரசியல்

வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக போட்டியிட்டு தெரிவான க.தணிகாசலம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

திருவுலச்சீட்டின் மூலம் இவர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தவிசாளர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சார்பில் தணிகாசலமும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஜெ.ஜெயரூபன் என்பவரும் போட்டியிட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன வாக்களித்திருந்தன.

இந்நிலையில், போட்டியிட்ட இருவருக்கும் சரிசமமாக 11 வாக்குகள் கிடைக்கப்பெற்ற நிலையில், திருவுலச்சீட்டின் மூலம் தவிசாளரை தெரிவு செய்வதென தீர்மாணிக்கப்பட்டு அதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்களிப்பின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடுநிலைமை வகித்திருந்தது.

அத்துடன் பிரதி தவிசாளர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நா.யோகராசாவும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் காமினி என்பவரும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட நா.யோகராசா 14 வாக்குகளைப் பெற்று பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார், அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிட்ட காமினி 6 வாக்குகளைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.