தமிழ் பேசும் மக்களுக்கே உள்ள பெருமை! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Navoj in அரசியல்

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை மைத்திரிபால சிறிசேன கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில், அவரை ஜனாதிபதியாக கொண்டு வந்த பெருமை தமிழ் பேசும் மக்களுக்கே உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் குறிப்பிட்டுள்ளார்.

வாழைச்சேனை - கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

மில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மூன்று வருடங்களாக ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி எந்தவொரு உறுதி மொழியையும் நிறைவேற்றாத ஜனாதிபதியாகவே இருக்கின்றார்.

அரசியல் கைதியான ஆனந்தசுதாகரன் தனது மனைவியின் மரணச்சடங்கிற்கு சென்ற வேளை குழந்தைகள் கட்டி அணைத்து கதறியதையும், பெண் குழந்தை தகப்பனுடன் சிறைச்சாலைக்கு செல்வதற்கு பேருந்தில் ஏறியதையும் நாங்கள் கண்ணுற்றோம்.

உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் கண்ணீர் விட்டு அழும் வேதனையான விடயமாக இந்த சம்பவம் இருந்தது.

இரண்டு குழந்தைகளும் தங்களது பாட்டியுடன் ஜனாதிபதியை சந்தித்த போது சித்திரை புதுவருடத்திற்கு முன்பாக அவரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாகக் கூறியும் அந்தக் குழந்தைகளையும் ஏமாற்றிய ஒரு ஜனாதிபதியாக நாங்கள் பார்க்கின்றோம்.

ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டை ஆண்டு கொண்டிருக்கும் சிங்கள பெரும்பான்மை கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறுபான்மை இன மக்களை இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஏமாற்றிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை மீண்டும் உணர வேண்டியதாக உள்ளது.

எமது உரிமைகள் மறுக்கப்படுமாக இருந்தால் இந்த நாட்டின் இரண்டாம் தர பிரஜைகளாக பணிக்கப்பட்டுக் கொண்டிருந்தோமானால் ஜனநாயக போராட்டம் எந்த வடிவத்தில் உருமாறும், எதிர்கால சந்ததியினர் இந்த ஜனநாய போராட்டத்தில் எந்தவிதத்தில் கையில் எடுப்பார்கள் என்று கூட எமக்கு தெரியாமல் இருக்கின்றது.

தீர்வு என்று வரும் போது இந்த நாட்டிலே அரசியல் சம்பந்தமான விடயமும் எனக்கு நினைவிற்கு வருகின்றது. 2015.01.08இற்கு முன்பு பத்து வருடங்களாக கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது.

தமிழ் பேசும் மக்களின் உதவியுடன் புரையோடிப்போயுள்ள எமது இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கொண்டு வருவார் என்ற நம்பிக்கையில், கொண்டு வருவேன் என்று கூறியதற்கிணங்க புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வந்த பெருமை தமிழ் பேசும் மக்களுக்கு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.