பச்சிளம் குழந்தைகளை ஜனாதிபதி ஏமாற்றியது மிகவும் வேதனையளிக்கின்றது

Report Print Navoj in அரசியல்

தமிழ் பேசும் மக்களே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டு வந்தனர். மக்களுக்கு நன்றிக்கடனாக ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாக வாழைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மனைவி யோகராணியின் 31ஆம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை புதுவருடத்திற்கு முன்பாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாகக் கூறிய ஜனாதிபதி ஏன் இன்னும் மௌனம் காக்கின்றார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனைவியின் மரணச்சடங்கிற்கு ஆனந்த சுதாகரன் சென்ற வேளை இரண்டு குழந்தைகள் கட்டி அனைத்து கதறியதையும், பெண் குழந்தை தகப்பனுடன் பேருந்தில் ஏறுவதையும் நாங்கள் கண்ணுற்று மிகவும் வேதனையடைந்தோம்.

இதனை கருத்தில் கொண்டே அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் விடுதலைக்காக சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து கையெழுத்து திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கினோம்.

இரண்டு குழந்தைகளும் தங்களது பாட்டியுடன் ஜனாதிபதியை சந்தித்த போது சித்திரை புதுவருடத்திற்கு முன்பாக அவரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதாகக் கூறிய ஜனாதிபதி தற்போது பச்சிளம் குழந்தைகளை ஏமாற்றியது மிகவும் வேதனையை தருவதாவும் கூறியுள்ளார்.

இந்த விடயமானது ஒட்டுமொத்தமாக சிறுபான்மை சமூகத்திரை ஏமாற்றும் செயலாகவே நாங்கள் பார்க்கக் கூடியதாக உள்ளது.

எனவே ஜனாதிபதி இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி பிள்ளைகளின் நலனின் அக்கறை கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன் என்றும் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் குறிப்பிட்டுள்ளார்.