பிரதி சபாநாயகர் பதவியில் மாற்றம்? கூடுகின்றது சபை

Report Print Rakesh in அரசியல்

மே மாதத்துக்கான முதல் வார நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் காலை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெறவுள்ளது.

சபை கூடிய பின்னர் ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் முக்கியத்துவம் மிக்க பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக்கோரும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலமாக அது அமையும்.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் எதிர்வரும் 8ஆம் திகதி எதிரணியில் அமரக்கூடும்.

இதனால், ஆளுங்கட்சி மற்றும் எதிரணி வரிசை இருக்கைகளில் மாற்றம் இடம்பெறும்.

அத்துடன், பிரதி சபாநாயகர் பதவியிலும் மாற்றம் இடம்பெறும். பிரதி சபாநாயகராக பதவி வகிக்கும் திலங்க சுமதிபால பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்ததால் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளார்.

மேலும், திலங்க சுமதிபால தனது பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்வதாக தனக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகுவதாக திலங்க சுமதிபால கூறியதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.