மாந்தை கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் ஐ.தே.கட்சியிடம்

Report Print Mohan Mohan in அரசியல்

13 உறுப்பினர்களைக் கொண்ட மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவுசெய்வதற்கான அமர்வு, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிகளின் உதவியுடன் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தவிசாளராக மகாலிங்கம் தயானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உதவி தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ராஜ்குமார் சிந்துஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாந்தை கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிட்டிருந்தது. அந்தவகையில், அக்கட்சியில் போட்டியிட்டிருந்த தயானந்தனுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 4 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 வாக்குகளும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு வாக்கும் கிடைத்தன.

அத்தோடு, பிரதித் தவிசாளராக போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆர்.சிந்துஜன் 7 வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 4 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 2 வாக்குகளும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு வாக்கும் கிடைத்தன.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், கூட்டமைப்பே ஆட்சியமைக்குமென தகவல்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் அதன் ஆட்சியை ஐ.தே.க. கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers